“மக்கள் என்னை நிச்சயம் தேடி வருவார்கள். அதுவரை நான் பொறுமையாக இருந்து கிருஷ்ண பரமாத்மா வாரிசாக அவதாரமெடுத்து மக்களை காப்பாற்றுவேன்” என காரைக்குடியில் சீமான் பேசியுள்ளார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செய்தியாளர்களை இன்று சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இவ்வாறு கூறினார். மேலும், “திமுக ஊழல் பற்றி பேசும் அண்ணாமலை, கடந்த 10 ஆண்டுகள் கூட்டணியாக இருக்கும் அதிமுகவின் ஊழல் பற்றியும் பேச வேண்டும். ஊழலுக்காக சிறை சென்ற தலைவியின் கட்சியில் கூட்டணி வைத்த பாஜகவின் தமிழக தலைவர் அண்ணாமலைக்கு திமுகவின் ஊழல் குறித்து பேச தகுதி இல்லை.
பாஜகவினர் சாமியைப் பற்றியே பேசுகின்றனர். ஆனால் நாங்கள், வாழும் பூமியைப் பற்றி பேசுகின்றோம். மக்கள் என்னை நிச்சயம் தேடி வருவார்கள். அதுவரை நான் பொறுமையாக இருந்து கிருஷ்ண பரமாத்மா வாரிசாக அவதாரமெடுத்து மக்களை காப்பாற்றுவேன். தமிழ் தேசிய அரசியல் கோட்பாடு உடைய நாம் தமிழர் கட்சி மட்டுமே தமிழகத்தில் உண்மையான எதிர்க்கட்சி. 2024 தேர்தலில் எத்தனை கட்சிகள் நின்றாலும், நாம் தமிழர் கட்சி தனியாக நிற்கும். அண்ணாமலையினால் அது முடியாது” என்றார்.
தொடர்ந்து எல்.கே.ஜி., யு.கே.ஜி வகுப்புகள் அரசுப்பள்ளிகளில் இயங்காது – இயங்கும் என வெளிவரும் தகவல்கள் குறித்து அவரிடம் கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளிக்கையில், “எல்கேஜி, யுகேஜி வகுப்புகளை மூடுவது என்பது அரசின் விளையாட்டு. அதில் கருத்து சொல்வதற்கு ஏதும் இல்லை” என்று கூறினார்.
தொடர்புடைய செய்தி: அரசுப்பள்ளிகளிலேயே LKG, UKG செயல்படும் : அதிருப்தி எதிரொலியால் தமிழக அரசு அறிவிப்பு!Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM