அகமதாபாத்: குஜராத்தைச் சேர்ந்த ஷாமா பிந்து என்ற பெண் தன்னைத் தானே திருமணம் செய்து கொண்டார். பாஜக தலைவர் ஒருவரின் எச்சரிக்கையை பொருட்படுத்தாமல், அவர் இந்து திருமணச் சடங்கு முறையைப் பின்பற்றினார்.
குஜராத்தின் வதோதராவைச் சேர்ந்தவர் ஷாமா பிந்து. 24 வயதான பிந்து , ”திருமணம் செய்துகொள்ள நினைக்கவில்லை. ஆனால், என்னை மணமகளாக பார்க்க வேண்டும் என்று விரும்புகிறேன். அதனால் இந்தத் திருமணத்தை செய்து கொள்கிறேன்” என்று கூறி இருந்தார்.
இவரின் இந்த அறிவிப்புக்கு பல விமர்சனங்கள் எழுந்தன. பாஜக தலைவர் ஒருவர், இந்தத் திருமணம் நடப்பதை அனுமதிக்க முடியாது என்று எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இந்த நிலையில் இன்று (வியாழக்கிழமை) ஷாமா பிந்து இந்து திருமண சடங்குகள்படி தன்னையே திருமணம் செய்துக் கொண்டார். திருமணத்தில் பிந்துவின் பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டனர்.
திருமணம் குறித்து ஷாமா பிந்து கூறும்போது, “நான் கடைசியில் திருமணம் செய்து கொண்டேன். மகிழ்ச்சியாக உள்ளது. நான் 11-ஆம் தேதிதான் திருமணம் செய்து கொள்ள இருந்ததாக கூறி இருந்தேன். எனினும் அன்றைய தினம் ஏதேனும் பிரச்சினை வந்துவிடக் கூடாது என்பதற்ககாக முன்கூட்டியே திருமணம் செய்து கொண்டேன்” என்றார்.
முன்னதாக, கடந்த ஆண்டு பிரேசிலியன் மாடலான கிரிஸ் கேலரா தன்னைத் தானே திருமணம் செய்துக் கொண்டிருக்கிறார். 2020-ஆம் ஆண்டு பட்ரிசியா கிறிஸ்டின் என்ற பெண் தன்னைத் தானே திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.