புதுடெல்லி: பஞ்சாப் நேஷனல் வங்கியில் வைர வியாபாரியான நிரவ் மோடியும் அவரது உறவினர் மெகுல் சோக்சியும் ரூ.13,500 கோடி மோசடி செய்துவிட்டு 2018-ல் வெளிநாடு தப்பிச் சென்றனர். தற்போது நிரவ் மோடி லண்டன் சிறையிலும் மெகுல் சோக்சி டொமினிக்கா நாட்டு சிறையிலும் உள்ளனர்.
இம்மோசடி வழக்கை அமலாக்கத் துறை தீவிரமாக விசாரித்துவருகிறது. இந்நிலையில், இவ்வழக்குத் தொடர்பாக புதிய குற்றப்பத்திரிகையை அமலாக்கத் துறை தாக்கல் செய்துள்ளது.
நியூயார்க் வீடு
நியூயார்க்கில் உள்ள மெகுல் சோக்சியின் மருமகள் வீடு ஒன்றையும், ஜப்பான் நிறுவனம் ஒன்றில் மெகுல் சோக்சி கொண்டிருந்த பங்குகளையும் முடக்கியுள்ளதாக அந்தக் குற்றப்பத்திரிகையில் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
மெகுல் சோக்சி 2010-ல் நியூயார்க்கில் ரூ.5.72 கோடி மதிப்பில் வீடு ஒன்று வாங்கியுள்ளார். அந்த வீட்டை 2015-ல் அவரது மருமகளுக்கு சொந்தமான நிறுவனத்துக்கு பணம் எதுவும் பெறமால் கைமாற்றியுள்ளார்.
ஜப்பானில் ஜிஎஸ்டிவி நிறுவனத்தில் மெகுல் சோக்சிக்கு 22.6 சதவீதம் பங்கு இருக்கிறது. அதன் மதிப்பு ரூ.11 கோடி ஆகும். இந்தச் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கி
பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் மெகுல் சோக்சியின் மனைவி பிரிதி சோக்சிக்கு முக்கியப் பங்கு இருக்கிறது என்றும், இந்த மோசடியின் பயன்தாரராக அவர் இருந்துள்ளார் என்றும் அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.