Presidential elections on July 18, counting, if needed, on July 21: Election Commission: இந்தியாவின் அடுத்த குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான 16வது குடியரசுத் தலைவர் தேர்தல் தேதியாக ஜூலை 18ஆம் தேதியை தேர்தல் ஆணையம் வியாழக்கிழமை அறிவித்துள்ளது.
“இந்திய குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தலுக்கான அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் நிர்ணயித்துள்ளது. தேர்தலுக்கான அறிவிப்பு ஜூன் 15ஆம் தேதி வெளியிடப்படும், வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசித் தேதி ஜூன் 29ஆம் தேதியும், ஜூலை 18ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் எனவும், தேவைப்பட்டால், ஜூலை 21ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்படும் என,” தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் டெல்லியில் செய்தியாளர்கள் சந்திப்பில் அறிவித்தார்.
மேலும், “தேர்தல் நாளில் அனைத்து கொரோனா முன்னெச்சரிக்கை மற்றும் நெறிமுறைகளையும் கடைபிடிக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது,” என்றும் அவர் கூறினார்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் ஜூலை 24, 2022 அன்று முடிவடைகிறது, மேலும் அரசியலமைப்பின் 62 வது பிரிவின்படி, பதவிக் காலம் முடிவடைந்ததால் ஏற்பட்ட காலியிடத்தை நிரப்புவதற்கான தேர்தலை பதவிக் காலம் முடிவடைவதற்கு முன்பே நடத்தி முடிக்க வேண்டும்.
பதவிக்காலம் முடிவடைவதற்கு முன் அறுபதாம் நாள் அல்லது அதற்குப் பிறகு தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்படும் என்று சட்டம் குறிப்பிடுகிறது. அரசியலமைப்பின் பிரிவு 324, குடியரசுத் தலைவர் மற்றும் துணை குடியரசுத் தலைவர் தேர்தல்கள் சட்டம், 1952, மற்றும் அதன் கீழ் உருவாக்கப்பட்ட விதிகள் அடிப்படையில், இந்திய குடியரசுத் தலைவரின் அலுவலகத்திற்கு தேர்தல் நடத்துவதற்கான மேற்பார்வை, வழிகாட்டுதல் மற்றும் கட்டுப்பாடு ஆகியவற்றை இந்திய ஆணையம் பெற்றுள்ளது.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் மற்றும் தேசிய தலைநகர் டெல்லி மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசம் உட்பட அனைத்து மாநிலங்களின் சட்டமன்ற உறுப்பினர்களையும் கொண்ட தேர்தல் கல்லூரியின் உறுப்பினர்களால் குடியரசுத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
இருப்பினும், ராஜ்யசபா மற்றும் லோக்சபா அல்லது மாநிலங்களின் சட்டப் பேரவைகளின் நியமன உறுப்பினர்கள், தேர்தல் கல்லூரியில் சேர்க்கத் தகுதியற்றவர்கள், எனவே, தேர்தல் செயல்பாட்டில் பங்கேற்க உரிமை இல்லை. அதேபோல, சட்ட மேலவை உறுப்பினர்களும் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு வாக்களிக்க தகுதியானவர்கள் அல்ல.
அரசியலமைப்பின் 55 (3) வது பிரிவின்படி தேர்தல் விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையின்படி ஒற்றை மாற்றத்தக்க வாக்கு மூலம் நடத்தப்படுகிறது மற்றும் அத்தகைய தேர்தலில் வாக்களிப்பது இரகசிய வாக்கெடுப்பு மூலம் நடத்தப்படும். இந்த அமைப்பில், வேட்பாளர்களின் பெயர்களுக்கு எதிராக வாக்காளர் விருப்பங்களைக் குறிக்க வேண்டும்.
வேட்பாளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வாக்காளர் பல விருப்பங்களைக் குறிக்கலாம். வாக்குச் சீட்டு செல்லுபடியாக இருப்பதற்கு முதல் விருப்பத்தேர்வைக் குறிப்பது கட்டாயம் என்றாலும், மற்ற விருப்பத்தேர்வுகள் விருப்பமானவை. வாக்கைக் குறிப்பதற்காக, வாக்குச் சீட்டை ஒப்படைக்கும் போது நியமிக்கப்பட்ட அதிகாரி மூலம் வாக்குச் சாவடியில் உள்ள வாக்காளர்களுக்கு ஒரு குறிப்பிட்ட பேனாவையும் ஆணையம் வழங்குகிறது.
இதையும் படியுங்கள்: நபிகள் குறித்து அவதூறு: நுபுர் சர்மா, நவீன் ஜிண்டால், சபா நக்வி மீது வழக்குப் பதிவு
பாராளுமன்ற உறுப்பினர்கள் புது தில்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள வாக்களிக்கும் இடத்திலும், மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் அந்தந்த மாநிலத் தலைநகரிலும் வாக்களிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ராஜ்யசபா பொதுச்செயலாளர் தேர்தலுக்கான தேர்தல் அதிகாரியாக இருப்பார் என ராஜீவ் குமார் அறிவித்தார்.
அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களின் மொத்த வாக்குகளின் மதிப்பு 5,43,200 மற்றும் மாநிலங்கள் 5,43,231 ஆகும். தேர்தல் ஆணையத்தின்படி, தற்போதைய தேர்தலுக்கான மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 4809 ஆக இருக்கும்.