புதுடெல்லி: ஜூலை 18-ஆம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறும் என தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்துள்ளார். டெல்லியில் இன்று பிற்பகல் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
தற்போதைய குடியரசுத் தலைவரின் பதவிக் காலம் வரும் ஜூலை 24-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதனையொட்டி வரும் 18-ஆம் குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 25-ஆம் தேதிக்குள் புதிய குடியரசுத் தலைவர் பதவியேற்றுக் கொள்ள வேண்டும்.
இந்நிலையில், ஜூன் 29-ஆம் தேதி முதல் தேர்தலில் போட்டியிட மனு தாக்கல் செய்யலாம். வேட்புமனுக்களை திரும்பப் பெற ஜூலை 2 கடைசி தேதி. தேர்தல் ஜூலை 18 ஆம் தேதி நடத்தப்பட்டு ஜூலை 21-ஆம் தேதியன்று முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
வாக்களிக்க யாருக்கு தகுதி? – குடியரசுத் தலைவரை நாடாளுமன்ற உறுப்பினர்கள், அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூடி தேர்ந்தெடுப்பர். இருப்பினும் நியமன எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் இந்தத் தேர்தலில் வாக்களிக்க முடியாது. அதேபோல் எம்எல்சி.க்களும் வாக்களிக்க இயலாது.
இந்த முறை 776 நாடாளுமன்ற உறுப்பினர்கள், 4,033 சட்டப்பேரவை உறுப்பினர்கள் என மொத்தம் 4,809 பேர் வாக்களிப்பார்கள். குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு முன்னதாக மாநிலங்களவைத் தேர்தல் முழுமையாக நடத்தி முடிக்கப்படும்.