ஜேர்மனியில் வீடு ஒன்றை உக்ரைன் அகதிகள் தீக்கொளுத்தியதாகக் கூறி, அந்த வீட்டின் உரிமையாளரின் மகள் கண்ணீர் விட்டுக் கதறும் காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது.
அதாவது, உக்ரைனியர்கள் சிலர் ரஷ்யக் கொடி ஒன்றைக் கொளுத்த முயன்றதாகவும், அதைத் தொடர்ந்து வீடு ஒன்று தீவைத்துக் கொளுத்தப்பட்டதாகவும் அந்த வீடியோவின் கீழ் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த வீடியோவை பிரபல ஜேர்மன் ஊடகமான Bild வெளியிட்டதாகவும் அந்த வீடியோவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ள நிலையில், அந்த வீடியோவின் உண்மை நிலை குறித்த தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
Bild செய்தித்தாளின் தலைமை எடிட்டரான Timo Lokoschat, தங்கள் பத்திரிகை அப்படி ஒரு வீடியோவை வெளியிடவில்லை என்றும், அது ஒரு போலி வீடியோ என்றும் தெரிவித்துள்ளார்.
பின்னர் மேற்கொண்ட விசாரணையில், அந்த வீடியோ உக்ரைன் போர் துவங்குவதற்கு நீண்ட காலம் முன்பே வெளியான ஒரு வீடியோ என்பது தெரியவந்துள்ளது.
உண்மையில் அந்த வீடியோ 2013ஆம் ஆண்டு யூடியூபில் வெளியாகியுள்ளது. அந்த வீடு உக்ரைன் அகதிகள் கொளுத்தியதாக கூறப்படும் இடத்திலிருந்து 300 கிலோமீற்றர் தொலைவிலுள்ள Walluf என்ற கிராமத்தில் உள்ளது.
அத்துடன், அந்தப் பெண் அழும் வீடியோ, 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவை Bild பத்திரிகை வெளியிடவில்லை என்பதுடன், அந்தப் பெண்ணின் தாய் புற்றுநோயால் உயிரிழந்ததாகவும், அவரது வீடு எரிந்துபோனதாகவும் அந்தப் பெண் குறிப்பிட்டிருந்தார். இதில் எங்கும் உக்ரைன் அகதிகளைப் பற்றிக் குறிப்பிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.