புதுடெல்லி,
தலைநகர் டெல்லியிம் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல் மந்திரியாக அரவிந்த் கெஜ்ரிவால் பதவி வகித்து வருகிறார். அவரது அமைச்சரவையில் சுகாதாரத்துறை மந்திரியாக இருந்து வருபவர் சத்யேந்திர ஜெயின்.
இதற்கிடையே, டெல்லி சுகாதாரத்துறை மந்திரி சத்யேந்திர ஜெயினை அமலாக்கத் துறையினர் அண்மையில் கைது செய்தனர். ஹவாலா பணப்பரிமாற்றம் தொடர்பான வழக்கில் சத்யேந்திர ஜெயின் கைது செய்யப்பட்டு உள்ளார். கொல்கத்தாவைச் சேர்ந்த நிறுவனத்தின் சட்ட விரோத பணப்பரிவர்த்தனை தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை இந்த நடவடிக்கையை எடுத்தது.
மேலும் டெல்லி சுகாதாரத்துறை மந்திரி சத்யேந்திர ஜெயினை ஜூன் 9-ம் தேதி வரை அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்க டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது.
இந்த நிலையில், ஹவாலா பண பரிவர்த்தனை வழக்கில் டெல்லி சுகாதாரத்துறை மந்திரி சத்யேந்தர் ஜெயினை மேலும் 4 நாட்கள் அதாவது ஜூன் 13-ம் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
இதற்கிடையில் டெல்லி சுகாதாரத் துறை மந்திரி சத்யேந்திர ஜெயின் வீடு, அவரது உதவியாளர் மற்றும் உறவினர்கள் இல்லங்களில் கடந்த 2 தினங்களாக அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் ரூ.2.83 கோடி, 133 தங்க நாணயங்கள் உள்ளிட்ட 1.80 கிலோ தங்கத்தை அமலாக்கத்துறை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.