தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கைலாசப்பட்டியில் முத்தாலம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. இதை முன்னிட்டு, நிலக்கோட்டையை சேர்ந்த கட்டட தொழிலாளி லட்சுமணன், மூலச்சத்திரம் பகுதியை சேர்ந்த பாபு, மதுரையை சேர்ந்த பன்னீர்செல்வம் (25) ஆகியோர் தனது குடும்பத்துடன் கைலாசப்பட்டியில் உள்ள உறவினர் தர்மராஜ் வீட்டுக்கு இன்று வந்தனர்.
இந்நிலையில், இன்று மாலை கைலாசப்பட்டி அருகே உள்ள பாப்பியன்பட்டி கண்மாயில் குளிப்பதற்காக பன்னீர்செல்வம், லட்சுமணன் மகன் மணிமாறன்(12), பாபு மகன் சபரிவாசன்(11) ஆகியோர் சென்றுள்ளனர். அப்போது, கண்மாயில் குளித்து கொண்டிருந்த சிறுவர்கள் ஆழமான பகுதிக்கு சென்றதால் நீரில் தத்தளித்துள்ளனர்.
இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பன்னீர்செல்வம் தண்ணீரில் இறங்கி அவர்களை காப்பாற்ற முயன்றார். அவருக்கு நீச்சல் தெரியாததால் 3 பேரும் நீரில் மூழ்கினர்.
இதனை அறிந்த அப்பகுதியினர் விரைந்து வந்து, கண்மாயில் குதித்து 3 பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள், 3 பேரும் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த தென்கரை போலீசார் 3 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த 5-ம் தேதி, கடலூர் மாவட்டம் கெடிலம் ஆற்றில் குளிக்கச் சென்ற 7 பெண்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தது தமிழகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில் தற்போது இந்த துயரச் சம்பவம் அரங்கேறியுள்ளது.