திருச்சி: திருச்சி பெரியகடைவீதியில் ஒருவழிப்பாதையில் போக்குவரத்து விதிமுறைகளை மீறி இருபுறமும் வாகனங்கள் செல்வதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதற்கு காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருச்சியின் மிகப்பெரிய வர்த்தகப்பகுதியான பெரிய கடை வீதியில், காந்தி மார்க்கெட் முதல் மலைக்கோட்டை வரைஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் மற்றும்வணிக நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதனால் இச்சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன.
மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிஎன்பதால் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக மாநகர காவல் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
அதன்படி, பெரிய கடைவீதி ஒருவழிச்சாலையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், காந்தி மார்க்கெட் பகுதியிலிருந்து மலைக்கோட்டை நோக்கி செல்லும் வாகனங்கள் மட்டுமே இவ்வழியில் செல்ல வேண்டும்.
மேலும், இந்த வீதியில் மாதத்தின் முதல் 15 நாட்கள் வீதியின் இடதுபுறமும், மீதி 15 நாட்கள் வீதியின் வலதுபுறமும் வாகனங்களை நிறுத்த வேண்டும். போக்குவரத்து காவல் துறை அவ்வப்போது சோதனை நடத்தி, இந்த விதிமுறைகளை மீறுவோருக்கு அபராதம் விதித்து வந்தனர்.
ஆனால், போக்குவரத்து காவல் துறையினர் தற்போது சோதனை நடத்துவது குறைந்துள்ளதால், ஒருவழிச்சாலை என்பது கண்டுகொள்ளப்படாமல், போக்குவரத்து விதிகளைமீறி எதிர் திசையிலும், அதாவது மலைக்கோட்டை பகுதியிலிருந்தும் காந்தி மார்க்கெட் பகுதிக்கு இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள், சரக்கு வாகனங்கள் சரளமாக சென்று வருகின்றன.
இதேபோல, ஒருபுறம் வாகனங்களை நிறுத்துவதற்குப் பதிலாக, எதிர் திசையிலும் வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. அத்துடன் தள்ளு வண்டி கடைகளும் தங்கள் பங்குக்கு வண்டிகளை நிறுத்துவதால் இந்த வீதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
மேலும், தற்போது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேலரண் சாலையில் பணிகள் நடைபெறுவதால், அங்கு போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதால், அந்தச் சாலையில் செல்வதற்குப் பதிலாக வாகன ஓட்டிகள் பலர் பெரிய கடை வீதி வழியாகச் செல்வதால், கடந்த ஒரு மாதமாக வழக்கத்தைவிட கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இது குறித்து பெரிய கடைவீதி பகுதியில் கடை வைத்திருக்கும் கணேசன் கூறியது: இந்த சாலை பெயரளவிலேயே ஒருவழிச்சாலையாக உள்ளது. ஒரு சில நேரங்களில் மட்டும் போக்குவரத்து போலீஸார் கண்காணிப்பதால் பெரிய அளவில் பலன் தரவில்லை. மேலரண் சாலையில் பணிகள் நடப்பதால், இந்த வழியாகச் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்துள்ளது. இதனால், பரபரப்பான நேரங்களில் காந்தி மார்க்கெட்டிலிருந்து மலைக்கோட்டை செல்ல சுமார் 30 நிமிடங்கள் ஆகின்றன.
எனவே, இப்பிரச்சினைக்கு தீர்வு காண, பெரிய கடை வீதிக்கென தனியாக போக்குவரத்து போலீஸாரை நியமித்து, விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், கண்காணிப்பு கேமாராக்களை கொண்டும் அபராதம் விதிக்கலாம். அப்போது தான் இந்த வீதியில் போக்குவரத்து நெரிசல் குறையும் என்றார்.