தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த நுபுர் சர்மா அதில் இஸ்லாமியர்கள் பற்றியும், நபிகள் நாயகம் பற்றியும் சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்திருந்தார். இதனையடுத்து நுபுர் சர்மாவின் பேச்சுக்கு ஆதரவு தெரிவித்து டெல்லியைச் சேர்ந்த பாஜக நிர்வாகியான நவீன்குமார் ஜிந்தாலும் ட்விட்டரில் பதிவிட்டதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனால் பல்வேறு தரப்பினரிடமிருந்தும் எதிர்ப்புகளும் கண்டனங்களும் கிளம்பியது. சர்வதேச அளவில் இந்த விவகாரம் பூதாகரமான நிலையில் பாஜகவில் இருந்து இருவரையும் தற்காலிகமாக நீக்கி நடவடிக்கை எடுத்திருக்கிறது கட்சி மேலிடம்.
இருப்பினும் மத நல்லிணக்கத்தை குலைக்கும் வகையில் பேசியும் கருத்தையும் பதிவிட்டிருந்த பாஜகவைச் சேர்ந்தவர்கள் மீது சட்ட ரீதியாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தது அந்த விவகாரத்தை தணித்தபாடில்லை.
இந்த நிலையில் மதவெறியை ஊக்குவிக்கும் வகையில் பேசியதாக நுபுர் சர்மா, நவீன்குமார் ஜிந்தால் மற்றும் பத்திரிகையாளர் சபா நக்வி ஆகியோர் மீது டெல்லி சிறப்புப்பிரிவு காவல்துறை வழக்குப்பதிவு செய்ததோடு இரண்டு FIRகளை பதிவு செய்துள்ளது.
ALSO READ : ‘பாஜக அனைத்து மதங்களையும் மதிக்கிறது; ஆனால்…’ – அருண் சிங்
அதன்படி நுபுர் சர்மா மீது IPC 153 (கலவரத்தை தூண்டுதல்), 295 (மத நல்லிணக்கத்தை குலைத்தல்), 505 (பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பதிவிடுதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அதேபோல, நவீன் ஜிண்டால், ஷதாப் சவுகான், சபா நக்வி, மௌலானா முஃப்தி நதீம், அப்துர் ரஹ்மான், குல்சார் அன்சாரி மற்றும் அனில் குமார் மீனா ஆகியோர் மீது மற்றொரு முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
வழக்குப்பதிவு செய்யப்பட்டவர்களின் சமூக வலைதள பக்கங்களை கண்காணித்ததில் மதவெறி தொடர்பாக பதிவுகள் இருப்பது தெரிய வந்துள்ளதை அடுத்து டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவின் உளவுத்துறை இணைவால் (IFSO) இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
ALSO READ:
சர்வதேச அளவில் எதிரொலித்த நபிகள் நாயகம் சர்ச்சை – இதுவரை நடந்தது என்ன?Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM