இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் தென்னிந்திய நடிகையான நயன்தாராவின் திருமணம் இன்று நடைபெற்று நடந்துமுடிந்துள்ளது. இந்நிலையில், திருமணத்தில் மணமக்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் தாலி எடுத்துகொடுத்து ஆசீர்வதித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
கேரளாவைச் சேர்ந்தவரான நயன்தாரா தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய தென்ந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். கோலிவுட் ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகை நயன்தாரா, ‘நானும் ரௌடிதான்’ படத்தில் நடித்தபோது, அந்தப் படத்தை இயக்கிய விக்னேஷ் சிவனுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்தப் பழக்கம் நாளடைவில் காதலாக மாற, சுமார் 6 வருடங்கள் இவர்கள் காதலித்து வந்தனர்.
இதற்கிடையில், நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் பல்வேறு கோயில்களுக்கு ஒன்றாக ஊர் ஊராக சென்ற நிலையில், இவர்களின் திருமணம் எப்போதும் நடைபெறும் என்று பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை கடந்த சில ஆண்டுகளாக ஆவலுடன் காத்திருந்தனர். இதையடுத்து இவர்களின் திருமணம் திருப்பதியில் நடைபெற உள்ளதாக செய்திகள் வெளியாகின. அதற்கேற்றார்போல், நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருப்பதி கோவிலுக்கு குறிப்பிட்ட இடைவெளியில் சென்று வந்தனர். ஆனால், அங்கு பாதுகாப்பு மற்றும் அளவுக்கு அதிகமான விருந்தினர்கள் காரணமாக திருமணத்தை நடத்த முடியாமல் போனநிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் தங்களது திருமணம் குறித்த அறிவிப்பை முதல்முறையாக விக்னேஷ் சிவன் பத்திரிக்கையாளர் சந்திப்பில் அறிவித்தார்.
அதன்படி இன்று பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு இடையே, சென்னை மகாபலிபுரத்தில் உள்ள ஷெரட்டன் க்ராண்ட் ரிசார்ட்டில் முக்கிய உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் கோலகலமாக நடைபெற்றது. இந்நிலையில் திருமண நிகழ்வின்போது மணமகன் விக்னேஷ் சிவனுக்கு, நடிகர் ரஜினிகாந்த் தாலி எடுத்து கொடுத்ததாகவும், அதன்பின்னர் மணமகள் நயன்தாரா கழுத்தில் விக்னேஷ் சிவன் தாலிகட்டியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டாரான நடிகர் ரஜினிகாந்துடன், நடிகை நயன்தாரா ‘சந்திரமுகி’, ‘தர்பார்’, ‘அண்ணாத்த’ ஆகியப் படங்களில் ஜோடியாக நடித்துள்ளார். ‘குசேலன்’ படத்தில் சிறப்புத் தோற்றத்திலும், ‘சிவாஜி’ படத்தில் ஒரு பாடலுக்கும் ரஜினியுடன் நயன்தாரா சேர்ந்து நடித்துள்ளார். இதனால் இவர்களுக்கிடையே நல்ல நட்பு இருந்ததன் காரணமாக, தங்களது வாழ்வின் மிக முக்கிய தருணத்தில், ரஜினிகாந்த் தாலி எடுத்துக் கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.