சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசிக்க முற்பட்ட 15 இலங்கையர்கள் அவுஸ்திரேலிய பாதுகாப்பு தரப்பினரால் கைது செய்யப்பட்டு இன்று (09) காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் நீர்கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த 20 மற்றும் 30 வயதுக்குட்பட்ட ஆண்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் சுமார் 19 நாட்களுக்கு முன்பு பல நாள் மீன்பிடி இழுவை படகில் ஆஸ்திரேலியாவுக்குச் சென்று கொண்டிருந்தபோது, அவர்களின் இழுவை படகு ஆஸ்திரேலிய கடற்கரைக்கு அருகில் தொழில்நுட்பக் கோளாறுக்கு உள்ளாகியுள்ளது. அந்த சந்தர்ப்பத்தில் அவுஸ்திரேலிய எல்லைக் காவலர்களால் அவர்கள் கைது செய்யப்பட்டு அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்கள் பின்னர் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
இவர்கள் இன்று அதிகாலை 04.40 மணியளவில் அவுஸ்திரேலிய விமானப்படைக்கு சொந்தமான ASY 975 என்ற விசேட விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்துவரப்பட்டனர்.
இவ்வாறு திருப்பி அனுப்பப்பட்டவர்களுடன் , அவுஸ்திரேலிய பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் அதிகாரிகளும்
இந்த விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த இலங்கையர்களை இலங்கையிலுள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம் பொறுப்பேற்று குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திடம் ஒப்படைத்துள்ளனர்.
பின்னர், சந்தேகநபர்கள் கட்டுநாயக்க விமான நிலைய குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களிடம் வாக்குமூலம் பெற்றுக்கொண்டு பின்னர் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.