புதுடெல்லி: நூபுர் சர்மா தெரிவித்த சர்ச்சை கருத்துகளுக்கு மத்திய அரசு மன்னிப்பு கேட்க தேவையில்லை என்று கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
பாஜக செய்தி தொடர்பாளர் நூபர் சர்மா தொலைக்காட்சி விவாதத்தில் பங்கேற்றபோது, நபிகள் நாயகம் பற்றி தெரிவித்த கருத்து உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம் சமுதாயத்தினரின் உணர்வுகளை புண்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதற்கு மத்திய அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் என கத்தார் வெளியுறவுத் துறை அமைச்சகம் கோரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து கேரள ஆளுநர் ஆரிப் முகமதுகான் நேற்று அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:
முகமது நபிக்கு எதிராக நூபுர் சர்மா தெரிவித்த கருத்துக்கு மத்திய அரசு மன்னிப்பு கேட்க தேவையில்லை. அனைவரின் உணர்வுகள் மற்றும் நம்பிக்கைகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் அனைத்தும் உள்ளடங்கிய அணுகுமுறையை இந்தியா பின்பற்றுகிறது என பிரதமரும் ஆர்எஸ்எஸ் தலைவரும் பலமுறை தெளிவுபடுத்திவிட்டனர். நூபுர் சர்மா தெரிவித்த சர்ச்சை கருத்துக்கு மத்திய அரசு மன்னிப்பு கேட்க தேவையில்லை. கடந்த காலத்தில் காஷ்மீர் விவகாரம் குறித்து பல நாடுகள் பல கருத்துகளை தெரிவித்தன. அவை எல்லாம் இந்தியாவை பாதிக்கவில்லை. இவ்வாறு ஆரிப் முகமது கான் கூறினார்.