குஜராத் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தலை முழுமையாக எதிர்கொள்வதற்காக அம்மாநிலத்தில் உள்ள தனது கட்சியின் ஒட்டுமொத்த குழுவையும் ஆம் ஆத்மி கலைத்திருக்கிறது.
குஜராத் மாநில சட்டப்பேரவையின் பதவிக்காலம் வருகிற டிசம்பர் மாதத்துடன் முடிவடையவுள்ளது. அதற்கு முன்னதாக இந்திய தேர்தல் ஆணையம் மாநில சட்டமன்ற தேர்தலை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த தேர்தலில் குஜராத் மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி – காங்கிரஸ் இடையே இருமுனைப் போட்டி நிலவிய நிலையில், இம்முறை ஆம் ஆத்மி கட்சியுடன் சேர்த்து மும்முனை போட்டியாக நிலவ இருக்கிறது. ஏற்கெனவே டெல்லிக்கு அடுத்தபடியாக பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சியை பிடித்துள்ளது ஆம் ஆத்மி. இப்படி இருக்கையில், இமாச்சல பிரதேசம், குஜராத் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களிலும் ஆம் ஆத்மியின் கவனம் திரும்பியிருக்கிறது.
அதன் அடிப்படையில், குஜராத் மற்றும் இமாச்சல பிரதேசம் மாநிலங்களில் விரைவில் தேர்தல் நடைபெற இருப்பதால் அந்த மாநிலங்களில் ஆம் ஆத்மியின் கவனம் அதிகமாகவே இருக்கிறது. அதன் முக்கிய மையமாக குஜராத் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் பதவியைத் தவிர மற்ற அனைத்து பொறுப்புகள் மற்றும் குழுக்களையும் ஒட்டுமொத்தமாக கலைத்து உத்தரவிட்டுள்ளது.
2022 சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகும் வகையில் ஒட்டு மொத்த குழுவும் கலைக்கப்பட்டு உள்ளதாகவும் விரைவில் புதிய குழுக்கள் அறிவிக்கப்பட்டு அந்தக் குழுக்கள் தங்களுடைய தேர்தல் பணிகளைத் தொடங்குவார்கள் எனவும் கட்சியின் தலைமை அறிவித்துள்ளது.
இதனால் மத்தியில் ஆட்சி செய்துவரும் பாரதிய ஜனதா கட்சி ஒவ்வொரு மாநிலமாக இழக்குமா அல்லது தனது ஆட்சியை மாநிலங்களில் தக்கவைக்குமா என்ற கேள்வியும் பரபரப்பும் இப்போதிருந்தே தொற்றிக்கொள்ள தொடங்கியிருக்கிறது என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
முன்னதாக தேர்தல் வியூகம் வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர் குஜாரத் மற்றும் இமாச்சல பிரதேச தேர்தல்களில் காங்கிரஸ் கட்சிக்கு நல்ல பாதையாக இருக்கும் என அண்மையில் தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
ALSO READ: ஆன்லைன் செயலிகள் மூலம் கடன் வாங்க வேண்டாம் – ரிசர்வ் வங்கி ஆளுநர் எச்சரிக்கை! Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM