டெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கில் டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் வரும் திங்கள்கிழமை ராகுல்காந்தி ஆஜராக உள்ளநிலையில், காங்கிரஸ் பொதுச்செயலாளர்கள் மற்றும் மாநில தலைவர்களுடன் அக்கட்சியின் தலைவர் சோனியாகாந்தி இன்று மாலை 4 மணிக்கு அவசர ஆலோசனை நடத்துகிறார். யங் இந்தியா நிறுவனத்தின் பங்குதாரர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தி இருவரும் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. கொரோனா தொற்று காரணமாக சோனியாகாந்திக்கு நேரில் ஆஜராக அவகாசம் வழங்கப்பட்டிருக்கும் நிலையில் ராகுல்காந்தி வரும் 13ம் தேதி நேரில் ஆஜராக உள்ளார். இதில் காங்கிரஸ் முன்னணி தலைவர்கள் ராகுல்காந்தியுடன் பேரணியாக செல்வது குறித்து வீடியோ கான்பிரன்சிங் மூலம் இன்று மாலை 4 மணிக்கு சோனியாகாந்தி முக்கிய ஆலோசனை செய்கிறார். இதில் ராகுல்காந்தி ஆஜராகும் போது, நாடு முழுவதும் எவ்வித போராட்டங்கள் நடத்துவது குறித்து முடிவுகள் எடுக்கப்பட உள்ளன. இதனிடையே ராகுல்காந்தி நேரில் ஆஜராகும் போது, டெல்லி அமலாக்கத்துறை அலுவலகம் முன்பு போராட்டம் நடத்த இளைஞர் காங்கிரசார் முடிவு செய்துள்ளனர். இதேபோல் பல்வேறு மாநிலங்களிலும் உள்ள அமலாக்கத்துறை அலுவலகங்கள் முன்பும் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் காங்கிரஸ் எம்.பி.க்கள் அனைவரும் திங்கட்கிழமை காலையில் டெல்லி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.