‘சசிகலாவுக்கும் அதிமுகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை; அவரைப் பற்றி பேசவேண்டிய அவசியமும் இல்லை’ எனக் காட்டமாகக் கூறியுள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்.
புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கூறுகையில், ”சசிகலாவை ஒரு போதும் அதிமுகவில் சேர்த்துக் கொள்ள மாட்டோம். சசிகலாவுக்கும் அதிமுகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவரைப் பற்றி பேசவேண்டிய அவசியமும் இல்லை. கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஒரு நபர் குறித்து ஏன் பேச வேண்டும்? அதிமுகவில் ஒற்றை தலைமை என்ற பேச்சுக்கே இடமே இல்லை. பாஜகவினர் அழைத்தால் அங்கு வேண்டுமானால் சசிகலா செல்லட்டும். அதிமுகவில் அவருக்கு இடமில்லை. அதிமுகவைப் பொறுத்தவரையில் எதுவாகினும் பொதுக்குழு எடுக்கும் தீர்மானம் மட்டுமே அதிகாரப்பூர்வமானது” என்றார்.
மேலும் அவர் பேசுகையில், “திமுகவும் மின்தடை பிரச்சனையும் பின்னிப் பிணைந்தவை, பிரிக்க முடியாதது. திமுக ஆட்சிக்கு வந்தாலே மின்தடை பிரச்சனை வந்துவிடும் என்பது எல்லோரும் அறிந்த ஒன்றே. மின்தடை பிரச்சனைக்கு அமைச்சரின் நிர்வாகத் திறமை இன்மையே காரணம். அவருக்கு இந்த துறையை பற்றி அனுபவம் போதாது. இதுகுறித்து நான் ஏற்கனவே சட்டசபையிலும் பேசியிருக்கிறேன். மின்சார துறையை தமிழக முதல்வரே கையில் எடுத்து கவனித்தால் மட்டுமே மின் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும்.
தமிழகத்தில் திமுகவுக்கு மாற்று அதிமுகதான். அதிமுக மட்டுமே தமிழகத்தில் எதிர்க்கட்சியாக இருக்க முடியும். பாஜக உள்ளிட்ட கட்சிகள் அவர் அரசியல் காரணங்களுக்காக சில விஷயங்களை கூறுவார்கள். அதை கவனத்தில் எடுத்துக் கொள்ள முடியாது. காலம் வரும்போது மக்கள் உரியவர்களை தேர்ந்தெடுப்பார்கள்” என்று கூறினார்.
இதையும் படிக்கலாம்: ‘எங்களுக்கு ஜாதி, மதம் ஏதுமில்லை’ – மதுரை ஆதீனத்துக்கு எதிராக விஜய் ரசிகர்கள் போஸ்டர்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM