சமஸ்டிபூர் (பீகார்): இறந்த மகனின் உடலை வாங்க அரசு மருத்துவமனைக்கு ரூ.50 ஆயிரம் லஞ்சம் கொடுக்க முடியாததால், வேதனையடைந்த வயதான தம்பதியினர், லஞ்சம் கொடுக்க தெரு தெருவாக பிச்சை எடுத்த சம்பவம் பீகாரில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் சமஸ்டிபூர் மாவட்டத்தை சேர்ந்தவர் மகேஷ் தாக்குர். இவரது மகன் கடந்த சில நாட்களுக்கு முன் மாயமானார். பல இடங்களில் தேடியும் மகனை கண்டுபிடிக்க முடியாமல் பெற்றோர் தவித்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் சதார் அரசு மருத்துவமனையில் மகனின் உடல் இருப்பதாக பெற்றோருக்கு தகவல் கிடைத்தது. உடனே உடலை வாங்க மகேஷ் தாக்குர், தனது மனைவியுடன் அரசு மருத்துவமனை சென்றார். அங்கு, தனது மகனின் உடலை அடையாளம் காட்டி தரும்படி கேட்டுள்ளனர். அதற்கு மருத்துவமனை ஊழியர்கள், உடலை தர வேண்டுமானால் ரூ.50 ஆயிரம் லஞ்சமாக வேண்டும் என்று கேட்டுள்ளனர். அதற்கு மகேஷ் தாக்குர், ‘நாங்கள் ஏழைகள். அவ்வளவு பணம் எங்களிடம் இல்லை. எப்படியாவது எங்களது மகனின் உடலை கொடுங்கள்’ என்று கெஞ்சியுள்ளார். ஆனாலும் அவர்கள் உடலை கொடுக்க மறுத்துள்ளனர். அதனால் வேறு வழியின்றி பணத்துக்காக தெருதெருவாக பிச்சை எடுத்தனர். இதன் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதுகுறித்து மருத்துவமனை உயரதிகாரி கூறுகையில், ‘இறந்தவரின் உடலை வழங்க மருத்துவமனை ஊழியர்கள் பணம் கேட்ட விவகாரம் தொடர்பாக உரிய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கு பொறுப்பானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இந்த மருத்துவமனையில் ஊழியர்கள், ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றுவதால் அவர்களுக்கு உரிய நேரத்தில் சம்பளம் கிடைப்பதில்லை என்று கூறப்படுகிறது. அதன் காரணமாகவும் இப்படி கறாராக நடந்து கொள்வதாகவும் கூறப்படுகிறது. அது தொடர்பாகவும் விசாரணை நடக்கிறது.