புதுக்கோட்டை: கறம்பக்குடியில் அரசு மருத்துவமனையில் காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி மறியல் செய்த 20 பேர் கைது செய்யப்பட்டனர். இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் சாலை மறியிலில் ஈடுபட்ட தமுமுகவைச் சேர்ந்த 20 பேரை போலீஸார் இன்று (ஜூன் 9) கைது செய்தனர்.
‘கறம்பக்குடி அரசு மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் மருத்துவரல்லா பணியாளர்களின் காலிப் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். பயன்பாடின்றி கிடக்கும் மருத்துவ உபகரணங்களை செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.
மேலும், சீனிகடை, அம்புக்கோவில் முக்கம் ஆகிய பகுதியில் சுமார் 200 மீட்டர் சுற்றளவுக்குள் பொதுப் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்படும் 5 டாஸ்மாக் மதுபானக் கடைகளையும் மூட வேண்டும்’ என வலியுறுத்தி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் சார்பில் சீனிகடை முக்கத்தில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
மறியலில் ஈடுபட்டோரிடம் ஆலங்குடி காவல் துணைக் கண்காணிப்பாளர் வடிவேல் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில், உடன்பாடு ஏற்படாததையடுத்து தமுமுக நகரச் செயலாளர் நூருல்அமின் உட்பட 20 பேரை போலீஸார் கைது செய்தனர். சாலை மறியல் போராட்டத்தினால் நகர் பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.