புதுச்சேரி: புதுச்சேரியில் சுற்றுலாத் தலங்கள், கடற்கரைப் பகுதிகளில் 15 வகையான பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டுமென பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்து புதுச்சேரி பொதுப் பணி மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பு: “புதுச்சேரியில் உள்ள சுற்றுலாத் தலங்கள், கடற்கரைப் பகுதிகள், தங்கும் விடுதிகளுக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை அதிகளவில் பயன்படுத்துவதால் சுற்றுச்சூழலுக்கு தீங்கு ஏற்படுகிறது.
அதன் விளைவுகளைப் பற்றி கவலைப்படாமல், திறந்தவெளியில் அதனை எறிவதாக அரசின் கவனத்துக்கு வந்துள்ளன. மேலும் சில இடங்களில் உணவுப் பொருட்கள், பாக்கெட்டில் அடைக்கப்பட்ட குடிநீர், உணவுப் பொருட்களை பிளாஸ்டிக் தாள்களிலும், பாக்கெட்டுகளிலும் அடைத்து விற்பனை செய்தும் வருகின்றனர். இந்த வகையான பிளாஸ்டிக் பொருட்களின் விற்பனை இனி தவிர்க்கப்பட வேண்டும். மேலும், சுற்றுச் சூழலுக்கு உகந்த பொருட்களையே பயன்படுத்த வேண்டும்.
இனி சுற்றுலாத் தலங்களில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும், குறிப்பிடப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்களைத் தவிர்க்க வேண்டும் என கடுமையாக அறிவுறுத்தப்படுகிறது. அதன்படி உணவுப் போர்த்தலுக்குப் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் தாள், ஒட்டும் பிளாஸ்டிக் தாள்கள், சாப்பாட்டு மேஜை மற்றும் தட்டுகளில் விரிப்பதற்குப் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் விரிப்புகள், தெர்மாகோல் தட்டுகள், பிளாஸ்டிக் பூசிய காகித தட்டுகள், பிளாஸ்டிக் பூசிய காகித கோப்பைகள், தேநீர் கோப்பைகள், தெர்மாகோல் கோப்பைகள், தண்ணீர் பாக்கெட்டுகள், பிளாஸ்டிக் உறிஞ்சு குழல்கள், அனைத்து அளவிலான, தடிமனான பிளாஸ்டிக் பைகள் (கேரி பேக்குகள்), பிளாஸ்டிக் கொடிகள், நெய்யப்படாத பாலிப்ரோப்பிலீன் பைகள் மற்றும் சுப நிகழ்வுகளில் வழங்கப்படும் துணிகள், கயிறு தாள்களினால் செய்யப்பட்ட பைகள் தவிர, பிற அனைத்து வகையான பைகளும் தவிர்க்கப்பட வேண்டும்.
இது தொடர்பாக சுற்றுலாப் பயணிகள், பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும், பிளாஸ்டிக் ஒழிப்பு இயக்கத்தில் அனைவரையும் பங்கேற்க செய்ய வேண்டும். “பிளாஸ்டிக் இல்லாத சுற்றுலாத் தலம்” மற்றும் “பிளாஸ்டிக் இல்லாத சுற்றுலா மண்டலம்” என்ற அறிவிப்பு பலகைகளை அப்பகுதியில் வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது” என்று அந்தச் செய்திக் குறிப்பில் கூறப்படுள்ளது.