தமிழகத்தின் காரைக்குடியில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், கடவுளின் வாரிசாக அவதாரமெடுத்து மக்களை காப்பாற்றுவேன் என நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டு பேசினார்.
அப்போது அவர், திமுக ஊழல் குறித்து பேசும் அண்ணாமலை, கூட்டணி காட்சியான அதிமுகவின் ஊழல் குறித்தும் பேச வேண்டும் என்றும், ஊழலுக்காக சிறை சென்ற தலைவியின் கட்சியில் இருந்துகொண்டு திமுக ஊழல் குறித்து பேச அண்ணாமலைக்கு தகுதி இல்லை என சாடினார்.
மேலும் பேசிய அவர், ‘பாஜகவினர் கடவுளைப் பற்றியே பேசுகின்றனர். ஆனால் நாங்கள், வாழும் பூமியைப் பற்றி பேசுகின்றோம். மக்கள் என்னை நிச்சயம் தேடி வருவார்கள். அதுவரை நான் பொறுமையாக இருந்து கிருஷ்ண பரமாத்மா வாரிசாக அவதாரமெடுத்து மக்களை காப்பாற்றுவேன்.
தமிழ் தேசிய அரசியல் கோட்பாடு உடைய நாம் தமிழர் கட்சி மட்டுமே தமிழகத்தில் உண்மையான எதிர்க்கட்சி. 2024ஆம் ஆண்டு
தேர்தலில் எத்தனை கட்சிகள் நின்றாலும், நாம் தமிழர் கட்சி தனியாக நிற்கும். அண்ணாமலையினால் அது முடியாது’ என தெரிவித்துள்ளார்.