அரசு வேலை வாய்ப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் வேலை வாய்ப்பு வழங்குவதை உறுதி செய்திடும் வகையில் உயர்மட்ட குழுவை அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
சட்டமன்ற கூட்டத் தொடரின்போது முதலமைச்சர் மு க ஸ்டாலின் மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு வேலைவாய்ப்பில் 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க ஏதுவாக பணி இடங்கள் கண்டறியப்பட்டு, பணி நியமனம் செய்வதை கண்காணிக்க உயர்மட்டக் குழு ஒன்று அமைக்கப்படும் என தெரிவித்திருந்தார்.
அதன்படி, மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு வேலைவாய்ப்பில் நடைமுறையில் உள்ள 4 சதவீத இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்குவது உறுதி செய்திடும் வகையில் உயர்மட்ட குழு ஒன்றை அமைத்து தமிழக அரசு இதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் துறை செயலாளர் தலைவராகவும், தொழிலாளர் நலத்துறை மனிதவள மேலாண்மை துறை செயலாளர்கள் உறுப்பினர்களாகவும் செயல்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் இக்குழுவில் 9 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். அரசு துறைகள், அரசு சார்பு நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், கழகங்கள், வாரியங்கள், கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவற்றில் வாய்ப்புகளின் மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்படுவதை இந்த குழு கண்காணிக்கும்.