புதுடெல்லி: ஈரான் வெளியுறவு அமைச்சர் அமீர் அப்தோலியான் நேற்று (புதன்கிழமை) இந்தியா வந்தார். பாஜக முன்னாள் செய்தித் தொடர்பாளர் நூபுர் சர்மாவின் சர்ச்சைப் பேச்சால் இந்தியாவுக்கு இஸ்லாமிய நாடுகள் பலவும் கண்டனம் தெரிவித்துள்ள சூழலில் அமீர் அப்தோலியானின் இந்திய வருகை முக்கியத்துவம் பெற்றுள்ளது.
முன்னதாக அவருக்கு இந்திய அரசு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த அமீர் அப்தோலியான், இருநாட்டு வர்த்தக உறவு குறித்து ஆலோசித்தார். வர்த்தக தொடர்பை மேம்படுத்துவது, தீவிரவாத தடுப்பு ஆகியன குறித்து இந்த சந்திப்பின்போது ஆலோசிக்கப்பட்டது. வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோரையும் ஈரான் அமைச்சர் சந்தித்தார். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடனான சந்திப்பின் போது முகமது நபி அவமதிப்பு குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார். முகமது நபி அவமதிப்பால் இருநாட்டு உறவில் எதிர்மறையான சூழல் நிலவுவதாக அவர் தெரிவித்துள்ளார். இத்தகவல் ஈரான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கை பாரசீக மொழியில் வெளியிடப்பட்டுள்ளது.
அமீருடனான சந்திப்பு குறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “ஈரான் வெளியுறவு அமைச்சர் ஹூசைன் அமீர் அப்தோலியானை சந்தித்ததில் மகிழ்ச்சி. இந்தியா, ஈரான் இடையேயான் நீண்ட கால கலாச்சார தொடர்புகளை மேம்படுத்துவது குறித்து ஆலோசித்தோம். இரு நாடுகளும் பரஸ்பரம் பயனடைந்துள்ளன. பிராந்திய பாதுகாப்பும் வளமும் மேம்பட்டுள்ளன” என்று பதிவிட்டுள்ளார்.
வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில், “அமீர் அப்தோலியானுடன் இருநாட்டு ஒத்துழைப்பு, வர்த்தகம், தொடர்பு, சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்து விரிவான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. ஆப்கானிஸ்தான், உக்ரைன் விவகாரம் குறித்தும் ஆலோசித்தோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
நூபுர் சர்மா சர்ச்சைக் கருத்துக்கு இஸ்லாமிய கூட்டமைப்பு நாடுகள், ஜிசிசி நாடுகள் என பல இஸ்லாமிய நாடுகள் கண்டனம் தெரிவித்த பின்னர் மேற்கு ஆசிய நாட்டில் இருந்து இந்தியா வந்துள்ள முதல் முக்கியப் பிரமுகர் அமீர் அப்தோலியான். அவர் மூன்று நாள் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். மேலும், ஈரான் வெளியுறவு அமைச்சராகப் பதவியேற்ற பின்னர் அவர் மேற்கொள்ளும் முதல் இந்தியப் பயணம் இதுவென்பதும் குறிப்பிடத்தக்கது.