புதுடெல்லி,
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடுகிறது. இதன்படி இந்தியா-தென்ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி டெல்லியில் உள்ள அருண்ஜெட்லி ஸ்டேடியத்தில் இன்றிரவு அரங்கேறுகிறது.
தொடர்ச்சியாக போட்டிகளில் பங்கேற்றதால் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, பும்ரா, முகமது ஷமி உள்ளிட்ட முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. தென்ஆப்பிரிக்க தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக லோகேஷ் ராகுல் நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில் வலது இடுப்பு பகுதியில் வலியால் அவதிப்படும் லோகேஷ் ராகுல் தொடரில் இருந்து நேற்று அதிரடியாக விலகினார். இதே போல் பேட்டிங் பயிற்சியின் போது வலது கையில் பந்து தாக்கி காயமடைந்த சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவும் விலகியுள்ளார். இதையடுத்து இந்த தொடருக்கான இந்திய அணியின் புதிய கேப்டனாக விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்டும், துணை கேப்டனாக ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ராகுல் இல்லாததால் இஷான் கிஷனுடன், ருதுராஜ் கெய்க்வாட் தொடக்க வீரராக இறங்குவார் என்று தெரிகிறது. மிடில் வரிசையில் ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷாப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா, தீபக் ஹூடா ஆகியோர் நிலைத்து நின்று ஆடுவதை பொறுத்தே அணியின் ஸ்கோர் எகிறும். பந்து வீச்சில் புவனேஷ்வர்குமார், ஹர்ஷல் பட்டேல், அவேஷ்கான், யுஸ்வேந்திர சாஹல் உள்ளிட்டோர் நம்பிக்கை அளிக்கிறார்கள்.
சில மாதங்களில் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடக்க இருப்பதால் அதற்கு சில பரீட்சார்த்த முயற்சிகளை இந்திய அணி நிர்வாகம் மேற்கொள்கிறது. இந்த தொடரில் கலக்கும் வீரர்களுக்கு உலக கோப்பை வாய்ப்பு கனியக்கூடும் என்பதால் ஒவ்வொரு வீரரும் தங்களது முழு திறமையை வெளிப்படுத்த தீவிரம் காட்டுவார்கள். உள்ளூர் ரசிகர்களின் ஆதரவு இந்திய அணிக்கு கூடுதல் உத்வேகம் அளிக்கும்.
அது மட்டுமின்றி இந்தியா சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 12 ஆட்டங்களில் வெற்றி பெற்று வீறுநடை போடுகிறது. இன்றைய ஆட்டத்திலும் வெற்றி பெற்றால் அது புதிய உலக சாதனையாக பதிவாகும்.
பவுமா தலைமையிலான தென்ஆப்பிரிக்க அணியில் குயின்டான் டி காக், டேவிட் மில்லர், மார்க்ராம், வான்டெர் துஸ்சென், ரபடா உள்ளிட்ட திறமையான வீரர்கள் உள்ளனர். இதில் டேவிட் மில்லர் சமீபத்தில் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ரன்மழை பொழிந்து குஜராத் அணியின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்தார். அவர் நல்ல பார்மில் இருப்பது தென்ஆப்பிரிக்காவுக்கு மகிழ்ச்சியான விஷயமாகும்.
தென்ஆப்பிரிக்க கேப்டன் பவுமா நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ‘சமீபத்தில் நாங்கள் சந்தித்த இந்திய அணியில் இருந்து தற்போதைய அணி மாறுபட்டது. நிறைய இளம் வீரர்கள் உள்ளனர். அவர்கள் அணியில் இடத்தை பிடிக்க தங்களது திறமையை நிரூபிக்க முயற்சிப்பார்கள்’ என்றார். ‘வேகப்பந்து வீச்சாளர் அன்ரிச் நோர்டியா எங்கள் அணியின் முக்கியமான வீரர். காயத்தில் இருந்து மீண்டு வந்த பிறகு அவர் ஐ.பி.எல்.-ல் ஆடினார். அதில் பெரிய அளவில் ஜொலிக்காவிட்டாலும் இந்த தொடரில் அசத்துவார் என்று எதிர்பார்க்கிறோம்’ என்றும் பவுமா குறிப்பிட்டார். இவ்விரு அணிகளும் 20 ஓவர் கிரிக்கெட்டில் இதுவரை 15 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 9-ல் இந்தியாவும், 6-ல் தென்ஆப்பிரிக்காவும் வெற்றி பெற்றுள்ளன.
டெல்லி மைதானத்தில் முதல் இன்னிங்ஸ் சராசரி ரன் 156. இங்கு பந்து அதிகமாக எழும்பாது. அதே சமயம் அதிக சுழல் ஜாலமும் இருக்காது என்று கணிக்கப்பட்டுள்ளது. பகலில் வெயில் சுட்டெரிப்பதால் அதன் தாக்கம் இரவிலும் ஓரளவு எதிரொலிக்கும்.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
இந்தியா: ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷாப் பண்ட் (கேப்டன்), ஹர்திக் பாண்ட்யா, தீபக் ஹூடா அல்லது தினேஷ் கார்த்திக், ஹர்ஷல் பட்டேல், புவனேஷ்வர்குமார், அவேஷ்கான் அல்லது உம்ரான் மாலிக், ரவிபிஷ்னோய் அல்லது அக்ஷர் பட்டேல், யுஸ்வேந்திர சாஹல்.
தென்ஆப்பிரிக்கா: குயின்டான் டி காக், ரீஜா ஹென்ரிக்ஸ், பவுமா (கேப்டன்), மார்க்ராம், வான்டெர் துஸ்சென் அல்லது டிரிஸ்டான் டப்ஸ், டேவிட் மில்லர், பிரிட்டோரியஸ், ரபடா, அன்ரிச் நோர்டியா, மார்கோ ஜேன்சன் அல்லது இங்கிடி, தப்ரைஸ் ஷம்சி.
இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.