ரஞ்சி கிரிக்கெட்: ஜார்கண்டுக்கு எதிரான ஆட்டத்தில் பெங்கால் அணி 773 ரன்கள் குவிப்பு

பெங்களூரு ,

ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் பெங்கால்-ஜார்கண்ட் அணிகள் இடையிலான கால்இறுதி ஆட்டம் பெங்களூருவில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த பெங்கால் அணி 2-வது நாள் ஆட்டம் முடிவில் 5 விக்கெட்டுக்கு 577 ரன்கள் எடுத்து இருந்தது. மனோஜ் திவாரி 54 ரன்களுடனும், ஷபாஸ் அகமது 7 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

3-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய பெங்கால் அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுக்கு 773 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. பெங்கால் அணியில் அபிஷேக் ராமன் (61 ரன்), கேப்டன் அபிமன்யு ஈஸ்வரன் (65), சுதிப் கராமி (186), அனுஸ்துப் மஜூம்தார் (117), மனோஜ் திவாரி (73), அபிஷேக் போரெல் (68), ஷபாஸ் அகமது (78) ரன்மழை பொழிந்தனர்.

இதே போல் சயான் மொண்டல் 53 ரன்களுடனும், ஆகாஷ் தீப் 53 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். முதல்தர கிரிக்கெட் போட்டி வரலாற்றில் ஒரு அணியில் 9 வீரர்கள் குறைந்தது 50 ரன்களுக்கு மேல் குவிப்பது இதுவே முதல் நிகழ்வாகும்.

இதற்கு முன்பு 1893-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த ஆக்ஸ்போர்டு மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக அணிக்கு எதிரான முதல்தர போட்டியில் ஆஸ்திரேலிய அணியில் 8 வீரர்கள் 50 ரன்களுக்கு மேல் எடுத்ததே இந்த வகையில் சாதனையாக இருந்தது.

இந்த 129 ஆண்டு கால சாதனையை பெங்கால் அணியினர் நேற்று தகர்த்து புதிய சரித்திரம் படைத்தனர். இதைத்தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடங்கிய ஜார்கண்ட் அணி நேற்றைய ஆட்டம் முடிவில் 5 விக்கெட்டுக்கு 139 ரன்கள் எடுத்து திணறியது. இன்று 4-வது நாள் ஆட்டம் நடக்கிறது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.