ரஷ்ய அச்சுறுத்தல்களை கருத்தில் கொண்டு இருநாடுகளுக்கும் இடையே உள்ள எல்லைகளில் பாதுகாப்பு தடுப்புகளை அமைப்பது குறித்து பின்லாந்து திட்டமிட்டு வருவதாக வியாழன்கிழமை தெரிவித்துள்ளது.
உக்ரைன் ரஷ்யா போரினால் உருவாகியுள்ள பதற்றமான சூழ்நிலை, அதன் அண்டை நாடுகளான பின்லாந்து மற்றும் ஸ்வீடனை பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளில் ஈடுபட வைத்துள்ளது.
நார்டிக் நாடுகளான பின்லாந்து மற்றும் ஸ்வீடன் ஆகிய இருநாடுகளும் மேற்கத்திய ராணுவ கூட்டமைப்பான நோட்டோவில் இணைய விருப்பம் தெரிவித்து அதற்கான விண்ணப்பத்தை அளித்துள்ளது.
இந்தநிலையில், ரஷ்யாவுடன் நேரடியாக எல்லைகளை பகிர்ந்து கொள்ளும் பின்லாந்து, தனது எல்லைகளில் பாதுகாப்பு தடுப்பு சுவர்களை அமைப்பது குறித்து அதன் எல்லைப் பாதுகாப்பு சட்டங்களில் திருத்தங்கள் செய்ய திட்டமிட்டுள்ளது.
சுமார் 1,300 கிமீ வனப்பகுதி நிறைந்த எல்லைகளை ரஷ்யாவுடன் நேரடியாக பகிர்ந்து கொள்ளும் பின்லாந்து, தனது எல்லைகளுக்கு தஞ்சம் தேடுவோர்களை அதிகப்படியாக அனுப்பி வைத்து புதிய அழுத்தத்தை ரஷ்யா ஏற்படுத்தலாம் என்ற அச்சத்தில் இந்த பாதுகாப்பு சட்ட திருத்தத்தை முன்னெடுத்து வருவதாக தெரியவந்துள்ளது.
இந்த சட்ட திருத்தமானது, புகலிட விண்ணப்பங்களை குறிப்பிட்ட நுழைவு புள்ளியில் மட்டுமே குவிக்கும் திட்டம் கொண்டது மற்றும் தற்போதைய ஐரோப்பிய யூனியனின் விதிமுறைகளின் படி புகலிட கோரிக்கையாளர்கள் ஐரோப்பிய ஒன்றியத்தின் எந்தவொரு உறுப்பு நாடுகளின் நுழைவு புள்ளியிலும் தங்களுக்கான புகலிட உரிமைகளுக்காக விண்ணப்பிக்கலாம்.
அதேசமயம் இந்த சட்டத்திருத்தமானது, பாதுகாப்பு வேலிகளை அமைக்கவும், பின்லாந்தின் எல்லைகளுக்குள் அதன் எல்லைப் பாதுகாப்பு கண்காணிப்பிற்காக புதிய சாலைகளை உருவாக்கவும் அனுமதிக்கிறது.
கூடுதல் செய்திகளுக்கு: குரங்கம்மை தொற்று ஆபத்து., தடுப்பூசி போட பரிந்துரைக்கும் ஜேர்மன் தடுப்பூசி ஆணையம்
பின்லாந்து எல்லைக் காவலரின் மதிப்பீட்டின் அடிப்படையில், அதன் கிழக்கு எல்லைகளில் உள்ள முக்கியமான மண்டலங்களுக்கான எல்லைத் தடைகள் குறித்து அரசு விரைவில் முடிவு செய்யும் என உள்துறை அமைச்சர் கிறிஸ்டா மிக்கோனென் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.