ராமநாதபுரம்: கட்டிய இரண்டு ஆண்டுகளிலேயே இடியும் நிலையில் தடுப்பணைகள்; அரசு பணம் 10 லட்சம் வீண்!

ராமநாதபுரம் வறட்சி மிகுந்த மாவட்டமாகும். இங்கு நடைபெறும் நெல் விவசாயம் முழுக்கவே வானம் பார்த்த பூமியாக மழை நீரை மட்டுமே நம்பியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் 1.37 லட்சம் ஹெக்டேரில் பயிர் சாகுபடியும், 65 ஆயிரம் ஹெக்டேரில் குண்டுமிளகாய் சாகுபடியும், அதனை தொடர்ந்து பருத்தி மற்றும் இதர பயிர்களும் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன.

கண்மாய்

தமிழகத்திலேயே கண்மாய்கள், குளம், குட்டைகள், அதிகமாக காணப்படும் மாவட்டம் ராமநாதபுரம். ஆண்டுதோறும் வைகை ஆற்றில் சுமார் 15 ஆயிரம் கன அடி நீர் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு திறக்கப்படுகின்றன. இந்த தண்ணீர் முறையாக பார்த்திபனூர் மதனு அணைக்கட்டிலிருந்து பழைய ஆயக்காட்டு பகுதிகளான பரமக்குடி, திருவாடனை, ராமநாதபுரம் பகுதிகளில் உள்ள பாசனக் கண்மாய்களில் நிரப்பப்படும். இவை நிரம்பிய பிறகே தண்ணீர் கடலுக்குச் செல்கிறது.

இந்த தண்ணீரை புதிய ஆயக்காட்டுதார்களாக உள்ள கடலாடி, கமுதி, முதுகுளத்தூர் பகுதி விவசாயிகளுக்குத் திருப்பிவிட வேண்டும் என விவசாயிகள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து பரளை ஆற்று வழியாக உபரி நீர் திறப்பதற்கு ஏற்பாடுகள் தமிழக அரசு சார்பில் செய்யப்பட்டு வந்தது. இதற்காக வரத்து கால்வாய்கள் பராமரிப்பு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் கடலாடி, முதுகுளத்தூர் பகுதியில் வரத்துக்கால்வாயை சுற்றி கட்டுப்படும் தடுப்புச்சுவர்கள் தரமற்றமுறையில் கட்டப்பட்டதால் சில மாதங்களிலேயே தடுப்பணைகள் உடைந்து, மதில் சுவரில் விரிசல் ஏற்பட்ட நிலையில் காணப்படுகின்றன. பெயரளவிற்கு நடைபெறும் இந்த தடுப்பணை கட்டுமான பணிகளை அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்வதில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர் ராமநாதபுரம் விவசாயிகள்.

விரிசலுடன் காணப்படும் திட்ட மதிப்பீடு சுவர்

இதுகுறித்து வைகை பாசன விவசாயிகள் சங்க தலைவர் எம்.எஸ்.கே.பாக்கியநாதன் நம்மிடம் பேசியபோது, “தமிழகத்திலேயே மிகப்பெரிய கண்மாய்கள் ராமநாதபுரத்தில் இருக்கின்றன. ஆர்.எஸ்.மங்களம் கண்மாய், களரி கண்மாய், பெரிய கண்மாய், சிக்கல் பாசனக் கண்மாய் என சொல்லிக்கொண்டே போகலாம். இந்த கண்காய்களையும், இதன் வரத்து கால்வாய்களையும் முறையாக தூர்வாரி பராமரித்தால் விவசாயத்துக்கும், குடிநீருக்கும் மக்கள் அல்லாட வேண்டிய அவசியம் இருக்காது.

முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட விளக்கனேந்தல் ஊராட்சியில் பரளை ஆற்றின் நீர்வழிப்பாதையாக விளங்கக்கூடிய மூலக்காரப்பட்டி வரத்துகால்வாயில் கடந்த 2019-20-ம் ஆண்டு காலத்தில் சுமார் 10 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட தடுப்பணை தரமற்றதாக கட்டப்பட்டதால், தடுப்பணை சுவர் இடிந்தும், ஆங்காங்கே விரிசலுடன் காணப்படுகிறது. இதேபோல் கடலாடி பகுதியில் வரத்துக்கால்வாயில் கட்டப்பட்ட தடுப்புச் சுவரும் இடிந்து சேதமாகியுள்ளது.

எம்.எஸ்.கே.பாக்கியநாதன்

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர், பொதுப்பணித்துறை மூலம் வரத்து கண்மாய்களில் புதிதாக கட்டப்பட்டுள்ள அனைத்து தடுப்பணைகளையும் நேரில் ஆய்வு செய்து தமிழக அரசின் நிதி வீணடிக்கப்படுவதை தடுக்க வேண்டும். ஒன்றிய அளவிலான அதிகாரிகள் குழு மற்றும் பண மதிப்பீட்டுக் குழுவை நேரடியாக பார்வையிட வைத்து தடுப்பணைகளின் உறுதித்தன்மையை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும். பெயரளவிற்கு கட்டப்பட்டுள்ள தடுப்பணைகளை கண்டறிந்து அதனை கட்டிய அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கூறினார்.

தடுப்பணைகளுக்கு விடிவு பிறக்குமா?

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.