வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி-அடுத்த ஐந்து நாட்களுக்கு, அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் மூத்த விஞ்ஞானி ஆர்.கே.ஜனமனி நேற்று கூறியதாவது:தென் மேற்கு பருவ மழை, மே 29ல், கேரளாவில் துவங்கி, தெற்கு மற்றும் மத்திய அரபிக் கடல், தமிழகம் மற்றும் கர்நாடகாவின் சில பகுதிகளில், 7ம் தேதி வரை நீடித்தது. இது, அடுத்த இரண்டு நாட்களில், மஹாராஷ்டிராவை அடையும்.
இதைத் தொடர்ந்து, மும்பையில் இரண்டு நாட்கள் மழை பொழியும். கனமான மேக மூட்டம் காணப்படும். காற்று பலமாக வீசும். இன்றும் நாளையும், வடகிழக்கில் அருணாச்சல பிரதேசத்தில் கன மழை பொழியும். இதைத் தொடர்ந்து, அசாம், மேகாலயாவில் அடுத்த ஐந்து நாட்களுக்கு மழை நீடிக்கும்.
தமிழகம், ஆந்திரா, கர்நாடகாவின் சில பகுதிகளில், அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்தாண்டு, தென் மேற்கு பருவ மழை இயல்பான அளவில் இருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement