இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் மாபெரும் போராட்டத்தை நடத்த உள்ளதாக பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பாகிஸ்தான் பார்லிமென்டில் சமீபத்தில் நடந்த ஓட்டெடுப்பில், அந்நாட்டு பிரதமராக இருந்த இம்ரான் கான் தோல்வி அடைந்தார். இதையடுத்து, நவாஸின் பாக்., முஸ்லிம் லீக் கட்சியைச் சேர்ந்த ஷெபாஸ் ஷெரீப் புதிய பிரதமராக பதவி ஏற்றார். பாக்., அரசை கலைத்து விட்டு பொதுத் தேர்தல் நடத்தக் கோரி பேரணியும் இம்ரான் நடத்தினார். இந்த நிலையில், இம்ரான் கானின் பாகிஸ்தான் தெரிக் இ இன்சாப் கட்சியின் தேசிய மாநாடு இஸ்லாமாபாத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் கட்சியின் தலைவராக இம்ரான் கானே மீண்டும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
அப்போது தொண்டர்களிடம் இம்ரான் பேசியதாவது: பாகிஸ்தான் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் மாபெரும் போராட்டத்தை நடத்த உள்ளோம். இது எங்கள் உரிமை. அனைத்து கட்சி அமைப்புகளையும் தயாராக இருக்கும்படி நான் கூறியுள்ளேன். உச்ச நீதிமன்றத்திடம் இருந்து அனைத்து தெளிவையும் பெற நாங்கள் காத்திருக்கிறோம். அது முடிந்தவுடன், அடுத்த சில நாட்களில் நான் தேதியை அறிவிப்பேன். உண்மையான சுதந்திரத்திற்கான நமது பிரச்சாரத்திற்கு நாம் முழுவதுமாகச் செல்ல வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
Advertisement