பழனியில் வைகாசி திருவிழா நடைபெறவிருப்பதை முன்னிட்டு மதுரையில் இருந்து சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
பழனியில் வரும் 12-ம் தேதி பிரசித்தி பெற்ற வைகாசி விசாக திருவிழா நடைபெறவுள்ளது. எனவே பயணிகள் மற்றும் பக்தர்கள் வசதிக்காக மதுரையில் இருந்து பழனிக்கு சிறப்பு ரயில் ஒன்றை இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி மதுரை – பழனி இடையே முன்பதிவில்லாத விரைவு சிறப்பு ரயில் மதுரையிலிருந்து காலை 10.50 மணிக்கு புறப்பட்டு மதியம் 1.25 மணிக்கு பழனி சென்று சேரும் எனவும், மறுமார்க்கத்தில் பழனி – மதுரை முன்பதிவில்லாத விரைவு சிறப்பு ரயில் பழனியில் இருந்து மதியம் 02.45 மணிக்கு புறப்பட்டு மாலை 05.10 மணிக்கு மதுரை வந்து சேரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு ரயில்கள் சோழவந்தான், கொடைக்கானல் ரோடு, அம்பாத்துரை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களில் 10 இரண்டாம் வகுப்புப் பெட்டிகள் மற்றும் 2 இரண்டாம் வகுப்பு பொது மற்றும் சரக்கு பெட்டிகள் இணைக்கப்படும் என்றும், இந்த ரயில்கள் ஜூன் 12 அன்று ஒரு நாள் மட்டும் இயக்கப்படும் எனவும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
முன்னதாக, வைகாசி விசாகத்தையொட்டி மதுரையிலிருந்து திண்டுக்கல் வழியாக பழனிக்கு சிறப்பு ரயில் இயக்க வேண்டும் என எம்.பி. சு.வெங்கடேசன் கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM