வகுப்புக்கு வந்தோமா, பாடம் நடத்தினோமா, கடமை முடிந்தது என்று இல்லாமல், மாணவர்களுக்காக பேராசிரியர்கள் சிலர் சிந்தித்தன் விளைவாக பழைய பேருந்து ஒன்று பயன் தரும் நூலகமாக மாறியுள்ளது.
மேகாலயா மாநில துரா அரசுக் கல்லூரியின் ஆங்கிலத் துறை பேராசிரியர்கள்தான் இதனை செய்துள்ளனர்.
இந்த பேருந்து மினி நூலகமாக இருப்பதோடு ஏழை, எளிய மாணவர்கள் தங்களுக்கான புத்தகங்கள், ஆடைகள், எழுது பொருட்கள் ஏன் சில நேரங்களில் உணவுகளை கூட இங்கிருந்து பெற முடிகிறது.
இது குறித்து அந்தக் கல்லூரியின் துணை பேராசிரியர் ஜெனா ஜெ மோமின் கூறுகையில், “இந்த பழைய பேருந்தை பயனுள்ள வாகனமாக மாற்றும் எண்ணம் மட்டும்தான் எங்களுடையது. அதில் மாணவர்களின் பங்களிப்பே அதிகம். அவர்கள் இந்த நூலகத்தில் வைக்க வேண்டிய புத்தகங்கள், மாணவர்களுக்குத் தேவையான உபகரணங்கள் எனப் பார்த்து பார்த்து கொண்டு வந்து சேர்த்துள்ளனர்.
நோட்பேட் தொடங்கி மழையில் தடையில்லாமல் கல்லூரி வர குடை வரை வைத்துள்ளனர்” என்றார்.
மேகாலயாவின் துரா நகரில் கல்வி நிலையங்கள் ஏராளமாக உள்ளன. அதனால் மற்ற பகுதிகளில் உள்ள மக்கள் தங்கள் பிள்ளைகளை துரா நகருக்கு அனுப்புகின்றனர். சிலர் அண்டை கிராமங்களில் இருந்து கடும் சிரமங்களுக்கு மத்தியில் வருகின்றனர். இந்த சிரமத்தை கருத்தில் கொண்டே பழைய பேருந்து இப்படியொரு யுடிலிட்டி வாகனமாக மாற்றப்பட்டுள்ளது.
பேருந்தில் இருக்கும் ட்ராப் ஏரியாவில் வசதி படைத்தவர்கள் தங்களால் இயன்ற புத்தகம், எழுதுபொருள்கள், ஆடைகள், உணவு என எதை வேண்டுமானாலும் வைத்துச் செல்லலாம்.
இந்தப் பேருந்தை முழுமையாக மாற்ற ஏற்பட்ட செலவை கல்லூரியின் ஆங்கிலத் துறை பேராசிரியர்கள் 7 பேர் பகிர்ந்து கொண்டுள்ளனர். இதற்காக அவர்கள் அனைவரும் தங்களின் இரண்டு மாத சம்பளத்தை கொடுத்துள்ளனர்.
இது குறித்து கல்லூரி மாணவி டான்சி கடேசில் மராக் கூறுகையில், “இந்த ப்ராஜக்ட் மூலம் பயனற்ற பொருளைக் கூட பயனுள்ளதாக மாற்றலாம்” என்று கூறினார்.
கரோனா காலத்திற்கு பின்னர் மாணவர் – ஆசிரியர் உறவு மேம்பட்டுள்ளது என்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்.