சென்னை: 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான இலச்சினை மற்றும் சின்னத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார்.
முதன்முறையாக தமிழ்நாட்டில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறவுள்ளது. சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் ஜூலை 28-ம் தேதி முதல் ஆகஸ்டு 10-ம் தேதி வரை இந்தப் போட்டித் தொடர் நடைபெறுகிறது.
இப்போட்டியில் 186 நாடுகளைச் சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட சர்வதேச சதுரங்க விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளனர்.
இப்போட்டியினை தமிழ்நாட்டில் நடத்துவது குறித்து முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் தமிழ்நாடு அரசு மற்றும் அகில இந்திய சதுரங்க கூட்டமைப்புடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கடந்த மாதம் கையெழுத்தானது.
இதனைத் தொடர்ந்து, இந்த ஒலிம்பியாட் போட்டிகள் சிறப்பாக நடைபெற தலைமைச் செயலாளர் தலைமையில் சிறப்பு குழு அமைக்கப்பட்டு அனைத்து முன்னேற்பாடு பணிகளும் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்போட்டிக்கான ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொள்ள சிறப்பு அலுவலராக தேசிய நலவாழ்வு குழும மேலாண்மை இயக்குநர் நியமிக்கப்பட்டு முன்னேற்பாட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்தத் தொடருக்கான ஜோதி ஏற்றப்பட்டு நாடு முழுவதும் வலம் வரவுள்ளது. தமிழ்நாடு அரசின் சார்பில் இப்போட்டி குறித்த விழிப்புணர்வினை மக்களிடையே ஏற்படுத்தும் வகையில் அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மாணவ, மாணவியர்களிடையே செஸ் போட்டிகள் நடத்திடவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பேருந்துகள், ரயில்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடுமிடங்களில் இச்சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து விளம்பரம் செய்யப்பட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ரிப்பன் மாளிகை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வண்ண விளக்குகளால் ஓளிரூட்டப்பட்ட 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான இலச்சினை மற்றும் “தம்பி” என்கிற சின்னத்தினையும் அறிமுகப்படுத்தினார்.
மேலும், #CHESSCHENNAI2022 என்ற HashTag-ஐ முதலமைச்சர் வெளியிட, அகில இந்திய சதுரங்க கூட்டமைப்பின் தலைவர் டாக்டர் சஞ்சய் கபூர் பெற்றுக் கொண்டார்.