வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: இந்தியாவில் கடந்த 8 ஆண்டுகளில் உயிரி பொருளாதாரம் 8 மடங்கு வளர்ச்சி அடைந்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
டில்லியில், 2 நாட்கள் நடைபெறவுள்ள உயிரி தொழில்நுட்ப தொழில் கண்காட்சியை பிரதமர் மோடி இன்று (ஜூன் 09) துவங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது: இந்தியாவின் உயிரி பொருளாதாரம் கடந்த 8 ஆண்டுகளில் 8 மடங்கு வளர்ச்சி அடைந்துள்ளது. அதாவது கடந்த 2014ம் ஆண்டில் 1000 கோடி டாலராக இருந்த உயிரி பொருளாதாரம், கடந்த 8 ஆண்டுகளில் 8000 கோடி டாலராக வளர்ச்சி அடைந்துள்ளது. உயிரி தொழில்நுட்ப சுற்றுச்சூழல் அமைப்பில் முதல் 10 நாடுகளின் பட்டியலில் இந்தியா இணைவது வெகு தொலைவில் இல்லை.
கடந்த 8 ஆண்டுகளில் இந்தியாவில் நூற்றுக்கணக்கில் இருந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கையும், இப்போது 70 ஆயிரமாக அதிகரித்துள்ளது. இந்தியாவில் தொழில் செய்வது எளிது என்ற கோட்பாட்டுடன் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. தொழில்முனைவோர் கலாச்சாரத்தை ஊக்கப்படுத்தி வருகிறது. தேசத்தின் வளர்ச்சிக்காக ஒவ்வொரு துறையையும் வலுப்படுத்தவே மத்திய அரசு எண்ணுகிறது. முந்தைய அணுகுமுறையான சில துறைகளைப் புறக்கணித்துவிட்டு, மற்றவற்றை மட்டும் கவனிக்கும் போக்கு மாறிவிட்டது. இவ்வாறு அவர் பேசினார்.
Advertisement