எனக்கு இன்னும் 6 மாதங்களில் திருமணம். என் வருங்காலக் கணவருடன் அடிக்கடி இணைந்திருப்பது வழக்கமாக இருக்கிறது. கர்ப்பம் தரிக்காமலிருக்க எமர்ஜென்சி கருத்தடை மாத்திரையைப் பின்பற்றச் சொல்கிறாள் என் தோழி. அது குறித்து விளக்க முடியுமா? அது எந்தளவுக்குப் பாதுகாப்பானது?
– சி. பவித்ரா, விகடன் இணையத்திலிருந்து
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, குழந்தையின்மை சிகிச்சை மருத்துவர் நிவேதிதா காமராஜ்
எமர்ஜென்சி கருத்தடை முறை என்பது நீங்கள் பாதுகாப்பில்லாத முறையில் தாம்பத்திய உறவு கொண்டிருந்தாலோ, வழக்கமாக நீங்கள் பின்பற்றும் கருத்தடை முறை தோல்வியடைந்திருந்தாலோ (உதாரணத்துக்கு காண்டம் கிழிவது), 21 நாள்கள் எடுத்துக்கொள்ளும் கருத்தடை மாத்திரைகளை நீங்கள் எடுக்கத் தவறியிருந்தாலோ, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகியிருந்தாலோ உங்களுக்கு உதவக்கூடியது.
எமர்ஜென்சி கருத்தடையில் ஹார்மோன் மாத்திரை, இன்ட்ரா யூட்ரைன் டிவைஸ் என இரண்டு உண்டு. பாதுகாப்பில்லாத முறையில் உறவு கொண்ட 72 மணி நேரத்துக்குள் ஹார்மோன் மாத்திரைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அந்த மாத்திரைகள் கருத்தரிப்பதைத் தள்ளிப்போடும் அல்லது தவிர்க்கும். இந்த மாத்திரைகளை எடுக்கும்போது தலைச்சுற்றல், தலைவலி, அடிவயிற்று வலி, இரண்டு பீரியட்ஸுக்கு இடையில் ப்ளீடிங் போன்ற பக்க விளைவுகள் இருக்கலாம்.
இந்த மாத்திரைகளை வழக்கமான கருத்தடை முறைக்கு மாற்றாக அடிக்கடி உபயோகிப்பது மிகவும் தவறு. தவிர்க்க முடியாத நேரத்தில், அவசரகால நடவடிக்கையாக எப்போதாவது மட்டுமே எடுக்க வேண்டும். அடிக்கடி எடுத்தால் கர்ப்பம் தரிப்பதில் சிக்கல் உள்பட பல பாதிப்புகள் ஏற்படலாம்.
எமர்ஜென்சி கருத்தடை மாத்திரையை எடுத்த 2 மணி நேரத்துக்குள் வாந்தியெடுத்துவிட்டால் அந்த மாத்திரையை மீண்டும் உபயோகிக்க வேண்டும் அல்லது மருத்துவரை அணுகி மாற்று வழி கேட்டுப் பின்பற்ற வேண்டும்.
21 நாள்கள் தொடர்ந்து எடுத்துக்கொள்ளும் கருத்தடை மாத்திரைகளை எடுப்பவராக இருந்து, ஒருநாள் அதை எடுக்கத் தவறிவிட்டால், எமர்ஜென்சி கருத்தடை முறையைப் பின்பற்றி, அடுத்த 12 மணி நேரத்தில் 21 நாள்கள் மாத்திரையை மீண்டும் தொடங்க வேண்டும்.
அடுத்தது ஐயுடி எனப்படும் இன்ட்ரா யூட்ரைன் டிவைஸ். இதையும் பாதுகாப்பில்லாத உறவு நிகழ்ந்த 72 மணி நேரத்துக்குள் அல்லது அதிகபட்சமாக 5 நாள்களுக்குள் பயன்படுத்த வேண்டும். பால்வினை நோய்களோ, கர்ப்பப்பை மற்றும் வெஜைனா பகுதியில் தொற்றோ இல்லாதவர்கள் மட்டும்தான் இதை உபயோகிக்க வேண்டும். அதீத ரத்தப்போக்கு, வயிற்று வலி, முறைதவறிய மாதவிலக்கு, வலி போல இதிலும் பக்க விளைவுகள் இருக்கும்.
இந்த இரண்டுமே அபார்ஷன் மாத்திரையோ, முறையோ இல்லை என்பதை கவனத்தில் கொள்ளவும். எதிர்பாராமல் நிகழும் கர்ப்பத்தைத் தடுப்பவை… அவ்வளவுதான்.