வாஷிங்டன்: அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தில் ஸ்மித்ஸ்பர்க்கில் உள்ள ஒரு தொழிற்சாலையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் பலியாகினர். ஒருவர் காயமடைந்தார்.
இதுகுறித்து போலீஸார் தரப்பில் கூறும்போது, “வியாழக்கிழமை மதியம் மேரிலாண்டின் ஸ்மித்ஸ்பர்க்கில் உள்ள ஒரு தொழிற்சாலையில் நுழைந்த மர்ம நபர் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினார். இதில் மூன்று பேர் பலியாகினர். ஒருவர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவரிடம் தொடர்ந்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்” என்று தெரிவித்துள்ளார்.
துப்பாக்கிச் சூடு நடத்தியவர் 23 வயதான, வெர்ஜினாவை சேர்ந்த இளைஞர் என்று போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அவரை பற்றிய முழு விவரத்தை போலீஸார் இதுவரை வெளியிடவில்லை.
அண்மையில், அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள தொடக்கப் பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 19 சிறுவர்கள் உட்பட 21 பேர் உயிரிழந்தனர். இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்ட 18 வயதான இளைஞர் போலீஸாரால் கொல்லப்பட்டார். பள்ளிச் சிறுவர்களை பாதுகாக்கப் போராடிய இரண்டு ஆசிரியர்களும் இந்தச் சம்பவத்தில் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவம் அமெரிக்காவை அதிர்ச்சியடைய செய்தது.
துப்பாக்கிச் சூடு நடந்த ராப் தொடக்கப் பள்ளியில் அமெரிக்க அதிபர் பைடன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். கொல்லப்பட்ட குழந்தைகளின் படத்திற்கு மலர் வளையம் வைத்து இரங்கல் தெரிவித்தார். மேலும், துப்பாக்கிச் சூடு சம்பவங்களுக்கு எதிராக சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அதிபர் ஜோ பைடன் வலியுறுத்தினார்.
இந்த நிலையில், அமெரிக்க பிரபலங்கள் பலரும் அமெரிக்காவில் துப்பாக்கி வாங்குவது தொடர்பாக சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்றும் துப்பாக்கி வாங்குவதற்கான வயதை அதிகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இந்தச் சூழலில் மீண்டும் ஒரு துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது.