சென்னை–தமிழகத்தில் தொழில் துவங்க, ‘ஆக்மி’ குழுமம், அரசுடன் பேச்சு நடத்தி வந்த நிலையில், கர்நாடகாவில், 52 ஆயிரம் கோடி முதலீடு செய்ய, அம்மாநில அரசுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. அந்த முதலீட்டை ஈர்க்க, தமிழக அரசு தவறி விட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஹரியானா மாநிலம், குருகிராமை தலைமையிடமாக வைத்து, நிலையான மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை உற்பத்தி செய்யும், ‘ஆக்மி கிளீன்டெக் சொலுயூசன்’ நிறுவனம் செயல்பட்டு வருகிறது.இந்த நிறுவனம், தமிழகத்தில் தொழில் துவங்க அரசுடன் பேச்சு நடத்தி வந்தது. திடீரென, கர்நாடகா மாநிலத்தில், 52 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ய, சமீபத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது.
இந்த நிதியில், ஹைட்ரஜன், அம்மோனியா தயாரிப்பு ஆலைகள், சூரிய சக்தி மின் நிலையம் ஆகியவற்றை, 2027ம் ஆண்டுக்குள் அமைக்க ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் வாயிலாக, 2,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். இதனால், ஆக்மி நிறுவனத்தின் 52 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டை பெற, தமிழக அரசு தவறி விட்டதா என்ற கேள்வி எழுகிறது. இதன் பின்னணியில், ஆட்சியில் உள்ளவர்களின், ‘எதிர்பார்ப்பு’ பூர்த்தியாகாதது தான், அந்நிறுவனம் கர்நாடகா செல்ல காரணமாகி விட்டதோ என்ற சர்ச்சைகளும் எழுந்துள்ளன.
இதுகுறித்து, தொழில்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:ஆக்மி குழுமம், தமிழக தொழில் துறையுடன் பலகட்ட பேச்சு நடத்தி உள்ளது; தொடர்ந்து பேசியும் வருகிறது. கர்நாடகாவுடன் ஒப்பந்தம் செய்ததால், தமிழகத்தில் அவர்கள் முதலீடு செய்ய மாட்டார்கள் என்பது கிடையாது.தமிழகத்தில் உள்ள அனைத்து வசதிகள் குறித்தும், அவர்களுக்கு எடுத்துக் கூறப்பட்டுள்ளது. அவர்கள் தொழில் துவங்க, தேவையான வசதிகள் குறித்தும் கேட்கப்பட்டுள்ளது.
மேலும், விரிவான திட்ட அறிக்கையும் பெறப்பட்டு, அது தொடர்பான அனைத்து பேச்சுகளும் முடிந்துள்ளன. எங்கு நிலம் ஒதுக்கீடு செய்வது; எவ்வாறு மின்சாரம் வினியோகம் செய்வது என்பது போன்ற ஆலோசனையும் நடந்து வருகிறது.
தமிழகத்தில் தொழில் துவங்க, ஆக்மி குழுமம் தயாராக உள்ளது. முதலீட்டை ஏற்க தமிழக அரசும் தயாராக உள்ளது. அந்நிறுவனம், தமிழகத்தில் தான் முதலில் ஆலையை அமைக்கும். அதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழகத்தை விட்டு எந்த முதலீடும் செல்லவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.