அகமதாபாத்: குஜராத்தை சேர்ந்த ஷாமா பிந்து என்ற இளம்பெண், பல்வேறு எதிர்ப்புகளையும் மீறி தன்னை தானே நேற்று திருமணம் செய்து கொண்டார். இதுவே நாட்டின் முதல் தனித் திருமணமாகும். குஜராத் மாநிலம், பரோடா பகுதியைச் சேர்ந்தவர் ஷாமா பிந்து. அவரது பெற்றோர் இருவரும் பொறியாளர்கள். சமூகவியல் பட்டம் பெற்றுள்ள பிந்து, தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். ஆண்-பெண் என்ற திருமண பந்தத்தில் விருப்பம் இல்லாத ஷாமா, தன்னை தானே திருமணம் செய்து வாழப் போவதாக அறிவித்தார். இதற்கு, ஆங்கிலத்தில் ‘சோலோகமி’ என்று பெயர். இந்த திருமணத்திற்கு பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.இந்நிலையில், தான் ஏற்கனவே ஜூன் 11ம் தேதி திருமணம் செய்து கொள்வதாக அறிவித்திருந்த ஷாமா, 3 நாட்கள் முன்னதாக, அதாவது நேற்றே மெகந்தி, மஞ்சள் பூசும் விழா உள்ளிட்ட பாரம்பரிய குஜராத் வழக்கபடி சடங்குகள் நடத்தி, தனது நெற்றியில் தானே குங்குமம் வைத்து, தனக்கு தானே தாலி கட்டி திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கான மந்திரங்கள் டேப் ரெக்கார்ட் மூலம் இசைக்கப்பட்டது.இந்த திருமண விழாவில் நெருங்கிய தோழிகள், உடன் பணியாற்றும் நண்பர்கள் என 10 பேர் மட்டுமே பங்கேற்றனர். இத்திருமணம் 40 நிமிடங்களில் முடிந்து விட்டது. இதன் மூலம், பெண் ஒருவர் தன்னைத்தானே திருமணம் செய்து கொள்ளும் நிகழ்வு நாட்டில் முதல்முறையாக குஜராத்தில் நடைபெற்றுள்ளது. இது பற்றி ஷாமா வெளியிட்டுள்ள வீடியோவில், ‘சோலோகமி திருமணத்துக்கு பலர் எதிர்ப்பு தெரிவித்தாலும், ஏராளமானவர்கள் எனது உணர்வை புரிந்து வாழ்த்துகள் தெரிவித்தனர். எனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி,’ என கூறியுள்ளார். முன்னதாக, திருமணத்துக்கு பிறகு கோவாவுக்கு தேனிலவு செல்ல இருப்பதாக அவர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.