இந்தியா: இந்தியாவில் 4-வது கரோனா அலை வருவதாக கூறுவது தவறானது என்று ஐசிஎம்ஆர் கூடுதல் தலைமை இயக்குனர் சமிரன் பாண்டா தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கடந்த சில நாட்களாக தினசரி கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து கொண்டே உள்ளது. குறிப்பாக தமிழகம், மகாராஷ்டிரா, கேரளா, தெலங்கானா மற்றும் கர்நாடகாவில் கரோனா தொற்று பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து இந்த மாநிலங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்று மத்திய சுகாதாரத்தறை அறிவுறுத்தி உள்ளது.
இந்நிலையில் சில மாவட்டங்களில் தொற்று அதிகரிப்பதை வைத்து 4-வது கரோனா அலை வருவதாக கூறுவது தவறானது என்று ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. இது குறித்த ஐசிஎம்ஆர் கூடுதல் தலைமை இயக்குனர் சமிரன் பாண்டா ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், ” இந்தியாவில் 4 வது கரோனா அலை வருவது என்று கூறுவது தவறானது. மாவட்ட அளவில் தரவுகளை ஆய்வு செய்ய வேண்டும். ஒரு சில மாவட்டங்களில் தொற்று அதிகரிப்பத்தை வைத்து கொண்டு நாடு முழுவதும் தொற்று அதிகரிப்பதாக கூற முடியாது. அனைத்து வகை உருமாறிய தொற்றுகளும் அச்சத்தை ஏற்படுத்துவது அல்ல” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.