டாக்கா,
கொரோனா பெருந்தொற்று பரவலை முன்னிட்டு உலக நாடுகளில் போக்குவரத்து சேவைகள் முடங்கின. உள்ளூர் சேவை தவிர்த்து, வெளிநாடுகளுடனான பேருந்து, ரெயில் மற்றும் விமான சேவையும் முடங்கியது.
இந்நிலையில், தொற்று குறைந்து வரும் சூழலில் பல நாடுகளும் கட்டுப்பாடுகளை தளர்த்தி வருகின்றன. கொரோனா பெருந்தொற்றின் காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொல்கத்தா மற்றும் வங்காளதேசத்தில் உள்ள நகரங்களுக்கு இடையேயான ரெயில் சேவைகள் கடந்த் 2020ம் ஆண்டு மார்ச்சில் நிறுத்தப்பட்டன.
2 ஆண்டுகளுக்கு பின் இந்தியா மற்றும் வங்காளதேசம் இடையேயான பயணிகள் ரெயில் சேவை கடந்த மே மாதம் 29ந்தேதி முதல் மீண்டும் செயல்பட தொடங்கியது. இதனால், இரு நாட்டு பயணிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதேபோன்று, இந்தியா மற்றும் வங்காளதேசம் இடையேயான பேருந்து போக்குவரத்து 2 ஆண்டுகளுக்கு பின் இன்று மீண்டும் செயல்பட தொடங்கி உள்ளது.
இதுபற்றி வங்காளதேசத்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், இந்தியா மற்றும் வங்காளதேசம் இடையே நாடுகளின் எல்லையை கடந்து செல்லும் பேருந்து போக்குவரத்து மீண்டும் செயல்பட தொடங்கி உள்ளது.
இதற்காக வங்காளதேசத்தின் தலைநகர் டாக்காவில் இருந்து இன்று காலை டாக்கா-கொல்கத்தா-டாக்கா பேருந்து சேவை கொடியசைத்து தொடக்கி வைக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த பேருந்து சேவைகள் நிறுத்தப்படுவதற்கு முன், டாக்கா-கொல்கத்தா-டாக்கா, டாக்கா-அகர்தலா-டாக்கா, டாக்கா-சில்ஹெட்-ஷில்லாங்-கவுகாத்தி-டாக்கா, அகர்தலா-டாக்கா-கொல்கத்தா-அகர்தலா மற்றும் டாக்கா-குல்னா-கொல்கத்தா-டாக்கா ஆகிய ஐந்து எல்லை கடந்த வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கப்பட்டன.