இந்திய நிகழ்வுகள்
பெண்ணை சுட்டுக் கொன்ற போலீஸ்காரர் தற்கொலை
கோல்கட்டா-மேற்கு வங்கத்தில், பொதுமக்களை நோக்கி போலீஸ்காரர் துப்பாக்கியால் சுட்டதில், ஒரு பெண் பலியானார்; போலீஸ்காரரும் தற்கொலை செய்து கொண்டார்.மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு, மாநில தலைநகர் கோல்கட்டாவில் வங்கதேச துணை துாதரகம் உள்ளது. நேற்று, இதன் வாசலில் நின்று கொண்டிருந்த ஒரு போலீஸ்காரர் திடீரென பொதுமக்களை நோக்கி சுடத் துவங்கினார்.இதில், சாலையில் ஒரு வாகனத்தின் பின் அமர்ந்து சென்ற பெண், குண்டு பாய்ந்து அதே இடத்தில் பலியானார். இதையடுத்து, அந்த பகுதியில் பெரும் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டது. சற்று நேரத்தில் அந்த போலீஸ்காரரும் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி கோல்கட்டா போலீசார் விசாரித்து வருகின்றனர்.
34 மாணவர்கள் தற்கொலை: ஆந்திராவில் பெரும் அதிர்ச்சி
அமராவதி-ஆந்திராவில், 10ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களில், 34 பேர் தற்கொலை செய்து கொண்டது, மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திராவில், முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில், ஒய்.எஸ்.ஆர்.காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு சமீபத்தில், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு நடந்தது. அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த ஆறு லட்சம் மாணவ – மாணவியர் தேர்வு எழுதினர்.கடந்த 3-ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகின.
இதில், நான்கு லட்சம் பேர் தேர்ச்சி அடைந்துஇருந்தனர். தேர்ச்சி அடையாத இரண்டு லட்சம் பேரில் 34 பேர் தற்கொலை செய்து கொண்டனர். இது மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலை செய்து கொண்ட மாணவ – மாணவியரின் பெற்றோருக்கு ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகன் நர லோகேஷ் ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக நேற்று ஆறுதல் கூறினார். இதற்கு, ஒய்.எஸ்.ஆர்.காங்., – எம்.எல்.ஏ-.,க்கள் மற்றும் அக்கட்சியின் நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
புகைப்பட மோகத்தில் ஆற்றில் விழுந்து ஒருவர் பலி
கேங்க்டோக்-சிக்கிமில், ஆற்று பாலத்தின் முனையில் நின்று புகைப்படம் எடுத்த போது, கால் தவறி ஆற்றுக்குள் விழுந்த இருவரில், ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார். மற்றொருவரை தேடும் பணி நடக்கிறது.
பீஹாரை சேர்ந்த ஒருவர், குடும்பத்தினருடன், வட கிழக்கு மாநிலமான சிக்கிமிற்கு சுற்றுலா வந்தார். அங்கு, ரிட் சூ ஆற்று பாலத்தின் முனையில், கார் டிரைவருடன் நின்று விதவிதமாக புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது, இருவரும் கால் இடறி ஆற்றுக்குள் விழுந்தனர்.தகவல் அறிந்து வந்த இந்தோ – திபெத் எல்லை பாதுகாப்புப் படையினர், ஆற்றில் குதித்து இருவரையும் தேடினர். இதில், டிரைவர் சடலமாக மீட்கப்பட்டார். சுற்றுலா பயணியை தேடும் பணி நடக்கிறது.
தமிழக நிகழ்வுகள்
சிறுமியை பலாத்கார முயற்சி: உறவினருக்கு வலை
கடலுார் : ஏழு வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற உறவினரை போலீசார் தேடி வருகின்றனர்.கடலுார், கோண்டூர் பனங்காடு பகுதியைச் சேர்ந்தவர் பரமசிவம், 35; கூலித் தொழிலாளி. இவர், கடந்த 6ம் தேதி, உறவினர் மகளான 2ம் வகுப்பு படிக்கும் 7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். நடந்த சம்பவத்தை வெளியில் கூறினால் கொலை செய்து விடுவதாக அவரை மிரட்டினார்.இதுகுறித்த புகாரின் பேரில், கடலுார் புதுநகர் போலீசார் ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து பரமசிவத்தை தேடி வருகின்றனர்.
கல்லூரி மாணவியிடம் சில்மிஷம்; வாலிபர் ‘போக்சோ’வில் கைது
செஞ்சி : தனியாக துாங்கிக்கொண்டிருந்த கல்லுாரி மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் ‘போக்சோ’ சட்டத்தில் கைது செய்தனர்.விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த கிராமத்தைச் சேர்ந்தவர் 17 வயது சிறுமி விழுப்புரம் கல்லுாரில் முதலாமாண்டு படித்து வருகிறார்.
பெற்றோர் சென்னையில் தங்கி கூலி வேலை செய்கின்றனர்.கல்லுாரி மாணவி அண்ணனுடன் கிராமத்தில் வசித்து வருகின்றார். இவர் கடந்த மாதம் 29ம் தேதி இரவு தனியாக வீட்டில் இருந்த போது மகாதேவிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த குமார் மகன் சந்தோஷ் 19. அங்கு வந்தார். மாணவி, சந்தோஷை கண்டித்து அனுப்பி உள்ளார்.மீண்டும் கடந்த 8ம் தேதி இரவு மாணவி வீட்டில் தனியாக துாங்கிக் கொண்டிருந்தபோது அங்கு வந்த சந்தோஷ் மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டார்.இதுகுறித்து மாணவி செஞ்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிந்து சந்தோஷை கைது செய்தனர்.
போலீஸ்காரர் ஓட்டி சென்ற கார் மோதி மூதாட்டி பலி
செஞ்சி : செஞ்சி அருகே வீட்டு வாசலில் துாங்கி கொண்டிருந்த மூதாட்டி தலை மீது சிறப்பு காவல் படை போலீஸ் ஓட்டி சென்ற கார் ஏறியதில் மூதாட்டி சம்பவ இடத்திலேயே இறந்தார்.விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த அனந்தபுரம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் முனியன் மனைவி லட்சுமி 60;
இவர், நேற்று முன்தினம் இரவு 11.15 மணியளவில் தனது வீட்டு வாசலில் படுத்து துாங்கி கொண்டிருந்தார்.அப்போது அதே தெருவை சேர்ந்த உளுந்துார்பேட்டை 10வது பட்டாலியன் சிறப்பு காவல் படையில் வேலை செய்யும் வெங்கடேசன் மகன் முத்துப்பாண்டி 29; ஓட்டி வந்த மகேந்திரா ஷைலோ (டி.என்.09 பி.ஜே., 5412) கார் லட்சுமியின் தலைமீது ஏறியது. இதில் லட்சுமி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார்.இது குறித்து லட்சுமியின் மகன் ராமச்சந்திரன் கொடுத்த புகார் மீது அனந்தபுரம் போலீசார் வழக்கு பதிந்து லட்சுமியின் உடலை பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.முத்துப்பாண்டி மீது வழக்குப் பதிந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பூட்டிய வீட்டில் 13 பவுன் நகை திருட்டு
சின்னமனுார்–சின்னமனுார் வ.உசி. 4 வது தெருவில் வசிக்கும் முனீஸ்வரன். நேற்று காலை மனைவி செல்வலட்சுமியுடன் வீரபாண்டியில் உறவினர் திருமணத்திற்கு வீட்டை பூட்டிவிட்டு, சாவியை பாத்ரூம் சுவர் மீது வைத்து சென்றுள்ளனர். மதியம் மர்ம நபர்கள் வீட்டிற்குள் புகுந்து பிரோவில் இருநத 13 பவுன் தங்க நகைகளை திருடி சென்றனர். கதவு திறந்திருப்பதை பார்த்தவர்கள் செல்வலட்சுமிக்கு தகவல் அளித்தனர். வீட்டிற்கு வந்து நகைகள் திருடு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். சின்னமனூர் இன்ஸ்பெக்டர் சேகர் விசாரிக்கின்றார்.
தண்டவாளத்தில் தூங்கிய ரவுடிகள் ரயிலில் சிக்கி பலி
துாத்துக்குடி;போதையில் ரயில் தண்டவாளத்தில் படுத்து துாங்கிய ரவுடிகள், ரயில் மோதி பலியாகினர்.
துாத்துக்குடி மூன்றாவது மைல் பகுதியை சேர்ந்த காளிபாண்டி என்பவர் மகன் மாரிமுத்து 20. திரு.வி.க., நகர் சண்முகசுந்தரம் என்பவர் மகன் மாரிமுத்து 23. திருநெல்வேலி மாவட்டம் பணகுடியை சேர்ந்தவர் ஜெபசிங் 23.ரவுடிகளான மூவரும் நேற்று முன்தினம் இரவு, துாத்துக்குடி மூன்றாவது மைல் மேம்பாலத்தின் கீழ் தண்டவாளத்தில் அமர்ந்து மது அருந்தினர்.
போதை தலைக்கேறியதில், அங்கேயே துாங்கி விட்டனர்.நேற்று அதிகாலை 3:00 மணிக்கு, துாத்துக்குடி துறைமுகத்திலிருந்து ஆந்திராவுக்கு சென்ற சரக்கு ரயில், இரு மாரிமுத்துகள் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.அவர்களுடன் இருந்த ஜெபசிங் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மூவர் மீதும் கொலை, வழிப்பறி, கொள்ளை வழக்குகள் உள்ளன.