கொழும்பு:இலங்கையில் ஏற்பட்டு உள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக்க, அதிபர் கோத்தபய ராஜபக்சே, இரண்டு அமைச்சகங்களை உருவாக்க உத்தரவிட்டுள்ளார்.
நம் அண்டை நாடான இலங்கை, அன்னியச் செலாவணி பற்றாக்குறை, எரிபொருள் விலை உயர்வு, மின் வெட்டு, அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு உள்ளிட்ட பல நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் கோத்தபய ராஜபக்சே சகோதரரும், முன்னாள் நிதியமைச்சருமான பசில் ராஜபக்சே, தன் எம்.பி., பதவியை ராஜினாமா செய்தார்.
இந்தப் பொறுப்பில் ஆளுங்கட்சி சார்பில் தகுதிஉள்ளவர்களை நியமிக்கவே தான் ராஜினாமா செய்ததாக பசில் ராஜபக்சே தெரிவித்திருந்தார். இந்நிலையில் நேற்று இரு அமைச்சகங்களை உருவாக்க, அதிபர் கோத்தபய ராஜபக்சே உத்தரவிட்டு உள்ளார். இதன்படி தொழில்நுட்பம் மற்றும் முதலீட்டு மேம்பாட்டு அமைச்சகம், மகளிர், குழந்தைகள் விவகாரம் மற்றும் சமூக அதிகாரமளித்தல் அமைச்சகம் என, இரு அமைச்சகங்களை உருவாக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தொழில்நுட்பம் மற்றும் முதலீட்டு மேம்பாட்டு அமைச்சராக, தொழிலதிபர் தம்மிகா பெரைரா நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகிஉள்ளது. இவர், முன்னாள் பிரதமர் ராஜபக்சே அரசில் நெடுஞ்சாலை அமைச்சக செயலராகவும், முதலீட்டு வாரிய தலைவராகவும் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். இவர், இலங்கையின் தற்போதைய நெருக்கடியை சமாளித்து, பொருளாதார மீட்சிக்கு வழி வகுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. சமூக பாதுகாப்பு நிதியம்
பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவ 20ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் சமூக பாதுகாப்பு நிதியம் ஏற்படுத்தப்படும்.- ரணில் விக்ரமசிங்கே, இலங்கை பிரதமர்
இலங்கைக்கு கடனுதவி
சர்வதேச நிதியம் வரும் வாரங்களில் இலங்கைக்கு உயர்மட்டக் குழுவை அனுப்ப திட்டமிட்டுள்ளது. இக்குழு, இலங்கைக்கு தேவையான கடனுதவி, இங்கு மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்து அறிக்கை அளிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து, சர்வதேச நிதியத்தின் நிதியுதவி, அக்.,ல் கிடைக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.