இன்று பாமக சார்பில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய அவசர சட்டம் இயற்ற வேண்டும் என்று, சென்னையில் நடைபெற்ற போராட்டத்துக்கு தலைமை ஏற்று நடத்திய அக்கட்சியின் தலைவர் அன்புமணி இராமதாஸ் பேசியதாவது,
“மதுவை எதிர்த்து நாற்பத்தி மூன்று ஆண்டுகள் மருத்துவர் அய்யா தலைமையில் போராடி வருகின்றோம். போதை பழக்கத்தை ஒழிக்க வேண்டும் என்று, கடந்த 15 ஆண்டு காலமாக பல போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றோம். இந்த ஆன்லைன் சூதாட்டம் அதிக அளவில் இளைஞர்களை பாதிக்கக்கூடிய ஒரு சாபக்கேடு, இதை தடை செய்ய வேண்டும் என்று மருத்துவர் அய்யா, பாட்டாளி மக்கள் கட்சி கடந்த 7 ஆண்டு காலமாக போராட்டம் செய்து வருகிறது.
அந்த அடிப்படையில்தான், தமிழக அரசு உடனடியாக ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என்று, முதல்கட்ட ஆர்பாட்டம் என் தலைமையில் இன்று நடந்து கொண்டிருக்கிறது.
மருத்துவர் அய்யா அவர்கள் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி இடம் தொலைபேசியில் பேசி வலியுறுத்தினர். பின்னர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஒரு அவசர சட்டத்தை கொண்டு வந்தார். அந்த சட்டம் முழுமையாக 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சட்டமாக அமல்படுத்தப்பட்டது. ஆனால் அதன் பிறகு ஆகஸ்ட் மாதம், மூன்றாம் தேதி, 2021 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் அந்த சட்டத்தை தடை செய்தது.
அதற்கான காரணம் அந்த சட்டத்தில் பல ஓட்டைகள் இருக்கிறது. மீண்டும் தமிழக அரசு அந்த ஓட்டைகளை சரி செய்து புதிய சட்டத்தை கொண்டு வரலாம். கொண்டு வர வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தடை செய்த அந்த ஆணையில் உள்ளது. இப்போது விலை மதிக்க முடியாத உயிர்கள், பிஞ்சு உயிர்கள், குடும்பத் தலைவர்கள், இளைஞர்கள், பெண்கள், பெரியவர்கள் அத்தனைபேரும் இதனால் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள்.
ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் வருவதற்கு முன்பாக கிட்டத்தட்ட 60 பேர் தமிழ்நாட்டில் தற்கொலை செய்துள்ளார்கள்.
ஆன்லைன் சூதாட்டத்திற்கு தமிழகத்தில் தடை விதித்து சட்டம் இருந்த காலகட்டத்தில் ஒரே ஒரு தற்கொலை கூட தமிழகத்தில் நடைபெறவில்லை.
சென்னை உயர்நீதிமன்றத்தால் இந்த ‘ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம்’ தடை செய்யப்பட்டது முதல் இன்று வரை நமக்குத் தெரிந்து 23 பேர் தமிழகத்தில் தற்கொலை செய்து இருக்கிறார்கள். நமக்கு தெரியாமல் எத்தனை உயிர்கள் போனதோ? ஆனால், இவ்வளவு காலமாக தமிழக அரசாங்கம் என்ன செய்து கொண்டிருந்தது” என்று அன்புமணி இராமதாஸ் பேசினார்.