லக்னோ: வரதட்சணை கேட்டு ராணுவ வீரர் ஒருவர் தனது மனைவியின் விரலை வெட்டிய சம்பவம் உத்தரபிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் மீரட் நகரைச் சேர்ந்தவர் சுதேஷ் பால் சிங். இவர் தனது குடும்பத்தினருடன் பெங்களூருவில் வசித்து வருகிறார். இதனிடையே, தனது ஒரே மகளான பூஜா தோமரை (31) கடந்த 2014-ம் ஆண்டு மீரட்டை சேர்ந்த ராணுவ வீரர் ஒருவருக்கு திருமணம் செய்து கொடுத்தார். இதையடுத்து, அவர்கள் இருவரும் அங்குள்ள ராணுவக் குடியிருப்பில் வசித்து வந்தனர். இந்நிலையில், திருமணமான நாளில் இருந்தே வரதட்சணை கேட்டு தனது மனைவி பூஜாவை ராணுவ வீரர் கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பல முறை தனது தந்தையிடம் பூஜா கூறியபோதிலும், சற்று பொறுத்துக் கொள்ளுமாறே அவர் கூறி வந்துள்ளார். இந்நிலையில், கடந்த வாரம் மீண்டும் வரதட்சணை கேட்டு மனைவி பூஜாவை ராணுவ மேஜர் கடுமையாக தாக்கியுள்ளார். உடனடியாக ரூ.10 லட்சத்தை கொண்டு வருமாறு கூறி இரும்புக் கம்பியால் பூஜாவை அவர் தாக்கியிருக்கிறார். அடி தாங்க முடியாமல் மயக்கம் அடைந்த பூஜாவை எழுப்புவதற்காக வீட்டில் இருந்த கத்தியை எடுத்து அவரது விரலை ராணுவ வீரர் வெட்டியுள்ளார். இதனால் அலறித் துடித்த பூஜாவின் சத்தத்தை கேட்டு பக்கத்து வீட்டில் வசிக்கும் ராணுவ அதிகாரிகள் அங்கு வந்து பூஜாவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ராணுவ வீரரின் மனைவி அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், ராணுவ வீரர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டி பெண்ணின் பெற்றோர் குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளனர். வரதட்சணை கேட்டு மனைவியின் விரலை ராணுவ வீரர் வெட்டிய சம்பவம் உத்தரபிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.