ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைனில் போரிட்டதாக கூறி மரண தண்டனைக்கு விதிக்கப்பட்ட பிரித்தானிய வீரர்களை காப்பாற்ற வலியுறுத்தி பிரதமர் போரிஸ் மற்றும் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியிடம் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உக்ரைனில் ரஷ்யாவுக்கு எதிராக போரிட்ட நிலையில் சிறைபிடிக்கப்பட்ட பிரித்தானிய வீரர்கள் இருவருக்கு ரஷ்ய நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
இந்த நிலையில் உறவினர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்ட பிரித்தானிய வீரர்கள் இருவரும் தங்களை காப்பாற்ற கெஞ்சியதாக கூறப்படுகிறது.
ஐடன் அஸ்லின்(28), மற்றும் ஷான் பின்னர்(48) ஆகிய இருவரும் உக்ரேனிய துருப்புக்களுடன் இணைந்து சண்டையிட்டதற்காக கூலிப்படையினர் மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக ரஷ்யா தரப்பில் குற்றம் சாட்டப்பட்டனர்.
இருவருக்கும் தற்போது மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன், மேல்முறையீடும் முடக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ரஷ்யர்கள் கைகளில் சிக்கியுள்ள அவர்களைப் பாதுகாப்பாக நாட்டிற்கு அழைத்து வர உதவுமாறு ஐடனின் குடும்பத்தினர் பிரித்தானியா மற்றும் உக்ரைன் அரசாங்கங்களை வலியுறுத்தியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட பிரித்தானிய வீரர்களை பயன்படுத்தி ரஷ்யா ஆதாயம் தேடும் என்பதில் மாற்றுக்கருத்திருக்க முடியாது என ஷான் பின்னரின் தாயார் 65 வயதான டெனிஸ் பிரைஸ் தெரிவித்துள்ளார்.
மட்டுமின்றி, ரஷ்யாவின் இந்த விசாரணை என்பதே போலித்தனம் எனவும், உண்மைக்கு புறம்பான செயல்தான் இந்த நடவடிக்கை எனவும் ஷான் பின்னரின் மனைவி கொந்தளித்துள்ளார்.
இதனிடையே, லண்டனில் அமைந்துள்ள உக்ரேனிய தூதரக அதிகாரிகளை நேரில் சந்தித்துள்ள அஸ்லினின் குடும்பத்தினர், போர் கைதிகளை மரியாதையுடன் நடத்தப்பட வேண்டும் எனவும்,
உக்ரைன் மற்றும் பிரித்தானிய அரசுகள் இணைந்து நடவடிக்கை முன்னெடுக்கவும், மரண தண்டனையை எதிர்கொள்ளும் இருவரையும் பத்திரமாக மீட்டுவர உதவ வேண்டும் என கோரிக்கையும் முன்வைத்துள்ளனர்.
இந்த நிலையில், பிரதமர் போரிஸ் ஜான்சனின் செய்தித் தொடர்பாளர் தெரிவிக்கையில், உக்ரைனுடன் இணைந்து பிரித்தானியாவும் குறித்த வீரர்களின் விடுதலைக்கு முயற்சிப்பதாகக் கூறினார், மேலும் பிரதமர் அலுவலகமும் இந்த விவகாரம் தொடர்பில் தீவிரமாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.