காந்திநகர்: முந்தைய தலைமுறையினர் எதிர்கொண்ட பிரச்சினைகளை இளைய தலைமுறையினர் எதிர்கொள்ளக்கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
குஜராத் மாநிலம் நவ்ராசியில் உள்ள பழங்குடியினர் பகுதியான குட்வேலில் நடைபெற்ற ‘குஜராத் பெருமை இயக்கம்’ என்ற நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி இன்று (வெள்ளிக்கிழமை) பங்கேற்றார். அப்போது அவர், 7 புதிய திட்டங்களைத் தொடங்கி வைத்து, 12 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, 14 திட்டங்களுக்கான பூமி பூஜையை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் குஜராத் மாநில முதல்வர் பூபேந்திர ரஜினிகாந்த் பட்டேல், மத்திய, மாநில அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் கூட்டத்தினரிடையே உரையாற்றிய பிரதமர், “இங்கு பழங்குடியின மக்கள் பெருமளவில் திரண்டிருக்கிறீர்கள். இத்தகைய நிகழ்ச்சிகளுக்கு பெருமையுடன் ஏற்பாடு செய்வது, பழங்குடியின சகோதர, சகோதரிகளின் தொடர்ச்சியான அன்பின் அறிகுறியாக உள்ளது. பழங்குடி மக்களின் ஆற்றல் மற்றும் உறுதியின் புகழை அங்கீகரிக்கும் விதமாக நவ்ராசி மண்ணுக்கு நான் தலைவணங்குகிறேன். கடந்த 20 ஆண்டுகளில் விரைவான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் இந்த வளர்ச்சியால் ஏற்பட்டுள்ள புதிய உத்வேகம் குஜராத்தின் பெருமையாகும்.
குஜராத்தில் விரைவான, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியில் புகழ்மிக்க பாரம்பரியத்தை இரட்டை என்ஜின் அரசு நம்பிக்கையுடன் முன்னெடுத்து செல்கிறது. இன்றைய திட்டங்கள் சூரத், நவ்ராசி, வல்சாத், தெற்கு குஜராத்தின் தபி மாவட்டங்களில் வாழ்க்கையை எளிதாக்கும்.
கடந்த 8 ஆண்டுகளில் மக்களின் புதிய பல பகுதிகளை இணைப்பதிலும், வளர்ச்சி நடைமுறைகள் மற்றும் விருப்பங்களை நிறைவேற்றுவதிலும் அரசு வெற்றி பெற்றுள்ளது. வெறும் அடிப்படை தேவைகளுக்கு மட்டுமே ஏழைகள் ஒடுக்கப்பட்டோர், தலித் மக்கள், பழங்குடியினர், பெண்கள் மற்றும் நலிந்த பிரிவினர் தங்களின் வாழ்நாள் முழுவதையும் செலவிட்டனர்.
முந்தைய அரசுகள் வளர்ச்சியை தங்களின் முன்னுரிமையாக எடுத்துக்கொள்ளவில்லை. மிகவும் உதவி தேவைப்படும் பிரிவினரும், பகுதிகளும், வசதிகளின்றி இருந்தன. 8 ஆண்டுகளில் “அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம்” என்ற மந்திரத்தை பின்பற்றி ஏழைகளின் நல்வாழ்வுக்கும், ஏழைகளுக்கு அடிப்படை வசதிகளை வழங்குவதற்கும் இந்த அரசு அதிக முக்கியத்துவம் அளித்திருக்கிறது. நலத்திட்டங்களை முறைப்படுத்துவதன் மூலம் ஏழைகளுக்கு 100 சதவீதம் அதிகாரம் அளிக்கும் திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது” என்றார்
பின்னர் குஜராத்தி மொழியில் பேசிய பிரதமர், “உங்களின் அன்பும், ஆசியும் எனது பலம்”. பழங்குடி சமூகத்தினரின் குழந்தைகள் சாத்தியமான அனைத்து வாய்ப்புகளையும் பெற வேண்டும். 3 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிக மதிப்புள்ள இன்றைய திட்டங்கள், முந்தைய காலத்தில் ஒரு சிறிய தண்ணீர் தொட்டி திறப்பதற்கு அளிக்கப்பட்ட தலைப்பு செய்திகளோடு ஒப்பிடுகையில், மிகவும் முரண்பட்டது. தொடர்ச்சியான நல மற்றும் வளர்ச்சி திட்டங்கள் நீண்டகாலமாக தமது நிர்வாக முறையாக உள்ளது.
இந்த திட்டங்கள் மக்கள் நலன் மற்றும் ஏழைகள் நலன் என்பதை நோக்கமாக கொண்டவை. இவை அனைத்தும் வாக்குகள் என்பதற்கு அப்பாற்பட்டது. எளிதில் பெற முடியாத வகையில் தொலைதூரத்தில் வாழும் அனைத்து ஏழைகளும், அனைத்து பழங்குடியினரும் தூய்மையான தண்ணீர் பெற உரிமை பெற்றவர்கள்.
அரசில் அங்கம் வகிப்பதை சேவைக்கான வாய்ப்பாக நாங்கள் கருதுகிறோம். பழைய தலைமுறையினர் எதிர்கொண்ட பிரச்சினைகளை நமது புதிய தலைமுறையினர் எதிர்கொள்ளக்கூடாது என்பதில் நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். எனவே இந்த திட்டங்கள் தூய்மையான குடிநீர், அனைவருக்கும் தரமான கல்வி போன்ற அடிப்படை வசதிகளை உறுதி செய்வதாக உள்ளன. இந்த பகுதியில் அறிவியல் பள்ளி கூட இல்லாத காலம் இருந்தது. இப்போது மருத்துவ கல்லூரிகளும், பல்கலைக்கழகங்களும் வருகின்றன. அடிப்படை கட்டமைப்பு, கல்வி, வணிகம், அதிதொலைவில் உள்ள பகுதிகளுக்கும் போக்குவரத்து தொடர்பான திட்டங்கள் ஆகியவற்றின் மூலம் வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது.
மருத்துவம், பொறியியல் போன்ற தொழில்நுட்ப பாடங்களிலும் தாய்மொழி கல்வி என்பது ஓபிசி, பழங்குடி குழந்தைகளுக்கான வாய்ப்பை ஏற்படுத்திதரும். வனச்சகோதரர்கள் திட்டத்தின் புதிய கட்ட அமலாக்கத்திற்காக மாநில அரசை நான் பாராட்டுகிறேன். ஒட்டுமொத்த, அனைவரையும் உள்ளடக்கிய, சமமான வளர்ச்சிக்காக நாங்கள் பாடுபட்டு வருகிறோம்” என்று பிரதமர் பேசினார்.