IPL broadcast rights 2023: Ambani vs Amazon Tamil News: கிரிக்கெட் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நிகழ்வுகளில் ஒன்றான, இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) ஒளிபரப்பு உரிமைகள் ஏலம் நாளை மறுநாள் ஜூன் 12 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த ஏலத்தை ஆன்லைனில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) நடத்த இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குப் பெறப்படும் இந்த உரிமத்திற்கு, உலகெங்கிலும் உள்ள சில முக்கிய நிறுவங்கள் ஏல பந்தயத்தில் களமிறங்கியுள்ளன. இதனால், ஐபிஎல் ஒளிபரப்பு உரிமை விற்பனைக்கு கடுமையான போட்டி நிலவுகிறது.
அவ்வகையில், ஐபிஎல் ஒளிபரப்பு உரிமையை பெறுவதில், உலகின் முன்னணி பணக்காரர்களாக வலம் வரும் ஜெஃப் பெசோஸின் அமேசான் மற்றும் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவங்களுக்கு இடையே கடுமையான போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ப்ளூம்பெர்க் அறிக்கையின்படி, உலகின் பணக்கார ஆளுமைகளில் இருவரும் நீண்ட காலமாக இந்த நாளுக்காகத் தயாராகி வருகின்றனர். அம்பானி கடந்த ஆண்டு முதல் உயர் அதிகாரிகளை வேலைக்கு அமர்த்திக் கொண்டிருந்தாலும், அமேசான் ஐரோப்பிய கால்பந்து உரிமைகளுக்காக அதிகத் தொகையைக் குவித்த பிறகு ஒப்பந்தத்தைப் பெறுவதில் ஆர்வமாக உள்ளது என்று அறிக்கை கூறுகிறது.
ஐபிஎல்லின் ஊடக உரிமைகளை வாங்குவது மட்டும் அல்ல, மேலும் அதிகமான இந்தியர்கள் உள்ளடக்கத்தை நுகர்வதற்கு ஆன்லைனில் செல்லும் சந்தையைப் பிடிக்க வேண்டும் என்பதே இதன் யோசனை என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், “வரவிருக்கும் தசாப்தத்தில் ஏல நடவடிக்கை இந்தியாவின் கதைக்கு ஒரு பந்தயமாக இருக்கும்” என்று மும்பையை தளமாகக் கொண்ட எலாரா கேபிட்டலின் ஊடக ஆய்வாளர் கரண் டவுரானி கூறியதாக ப்ளூம்பெர்க் மேற்கோளிட்டுள்ளது. “டேட்டா-நுகர்வோர் இந்தியர்கள் சில்லறை வணிகம் முதல் வங்கி மற்றும் பயணத்திலிருந்து கல்வி வரை ஒவ்வொரு வணிகத்தின் அதிர்ஷ்டத்தையும் ஆணையிடுவார்கள் என்ற வாக்குறுதியின் மீது ஏலதாரர்கள் பணம் செலுத்துகிறார்கள்.” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது ஐபிஎல் ஊடக உரிமையை வைத்திருக்கும் டிஸ்னி, ஒப்பந்தத்தின் விளைவாக அதன் இந்திய சந்தையில் ஒரு பெரிய ஊக்கத்தை கண்டது. டிஸ்னி கூட உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து தனது உயர்மட்ட நிர்வாகிகளை அழைத்து வந்து உரிமைகளை எவ்வாறு தக்கவைத்துக்கொள்வது என்பது குறித்த திட்டத்தில் பணியாற்றுவதாக அறிக்கை கூறினாலும், அது ரிலையன்ஸ் மற்றும் அமேசான் நிறுவனங்களுடன் போட்டியிடுமா என்பதைப் பார்க்க வேண்டும்.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) ஒளிபரப்பு மற்றும் ஸ்ட்ரீமிங்கை தனித்தனியாக நடத்துவது இதுவே முதல் முறையாகும். இந்திய வாரியம் ஆன்லைன் மூலம் 35-40,000 கோடி வரை வருமானம் ஈட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.