மும்பை : மும்பை உயர்நீதிமன்றத்தில் நேற்று ஒரே நாளில் நீதிபதி ஒருவர் 190 வழக்குகளை விசாரித்துள்ளார். மும்பை உயர் நீதிமன்றத்தின் வழக்கமான பணி நேரம் மாலை 4.30 மணி வரையுடன் நிறைவடையும் நிலையில் நேற்று நீதிபதி எஸ்.எஸ் ஷின்டே தலைமையிலான அமர்வு இரவு 8 மணி வரை வழக்குகளை விசாரித்துள்ளது. நீதிபதி ஷிண்டே தலைமையிலான அமர்வில் நேற்று 200க்கும் மேற்பட்ட வழக்குகள் பட்டியலிடப்பட்டன. அதில் 190 வழக்குகளை நீதிபதி ஷிண்டே விசாரித்துள்ளார்.குறிப்பாக கிரிமினல் ரிட் மனுக்கள், ஜாமீன் கோரிய மனுக்கள், ஃபர்லோ மனுக்கள் மீது நீதிபதி விசாரணை நடத்தி உள்ளார். 190 வழக்குகளை விசாரித்த நீதிபதி ஷிண்டேவுக்கு மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு பாராட்டு தெரிவித்துள்ளார். முன்னதாக சமீபத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி எஸ்.ஜே. கதவல்லா ஒரே நாளில் 150 வழக்குகளை விசாரித்ததே சாதனையாக இருந்த நிலையில் தற்போது இந்த சாதனையை நீதிபதி ஷிண்டே முறியடித்துள்ளார். நீதிபதி எஸ்.எஸ். ஷிண்டே மும்பை உயர்நீதிமன்றத்தின் மூன்றாவது மூத்த நீதிபதி ஆவார். இவர் ஒரு மாதத்தில் ஓய்வு பெற உள்ளார். ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக இவரது பெயரை உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது. எல்கர் பரிஷத், ரிபப்ளிக் டிவி தலைமை ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி மீது தற்கொலைக்குத் தூண்டியதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கு, மகாராஷ்டிர முன்னாள் அமைச்சர் அனில் தேஷ்முக் மற்றும் பாலிவுட் கங்கனா ரனாவத் ஆகியோருக்கு எதிரான வழக்குகள் உட்பட கடந்த சில ஆண்டுகளில் நீதிபதி எஸ்.எஸ்.ஷிண்டே பல உயர்மட்ட வழக்குகளை கையாண்டுள்ளார்.