பெங்களுர் சாமுண்டீஸ்வரி ஸ்டுடியோ, கோகிலா’ கன்னடப் படத்தின் மலையாள ஆக்கத்தில் ஈடுபட்டிருந்தார் பாலுமகேந்திரா.
பரிசு பெற்றதற்காக வாழ்த்துத் தெரிவித்தபோது புன்சிரிப்போடு ‘தாங்க்ஸ்’ சொன்னார்.
“பெரும்பாலும் பெங்களூரிலேயே படப்பிடிப்பை வைத்துக் கொள்கிறீர்களே, குறிப்பிட்டுச் சொல்லும்படியான காரணம் ஏதாவது இருக்கிறதா, அல்லது ராசி என்பதலா?’ –
காஷுவலாகப் பேச்சைத் தொடங்கினேன்.“ராசியிலெல்லாம் எனக்கு நம்பிக்கை கிடையாது. பெங்களூர், ஊட்டி இந்த இடங்களில் நான் நினைத்தபடி லொகேஷன் சுலபமாகக் கிடைக்கிறது. தவிர, செட் வாடகை கம்மி. கிளைமேட் இதமாக இருப்பதால் எவ்வளவு நேரம் வேலை செய்தாலும் களைப்பே தெரிவதில்லை. அமைதியாக, திட்டமிட்டபடி படப்பிடிப்பை நடத்த வேறெங்கும் அருகில் வேறெங்கும் இடம் கிடையாது” – அனுபவித்துச் சொல்லி முடித்தார் பாலுமகேந்திரா.
பேச்சு ‘மூன்றாம் பிறை’யைப் பற்றித் திரும்பியது. “பரிசு கிடைக்க வேண்டுமென்ற நோக்கத்தோடு அந்தப் படத்தை நான் எடுக்கவில்லை. எப்போதும் போல் வித்தியாசமானதொரு கதையை வித்தியாசமான சூழ்நிலையில் படமாக்க வேண்டுமென்று நினைத்துப் படமாக்கினேன். “ஸ்பெஷல் கேர்” எதையும் எடுத்துக் கொள்ளவில்லை. ஸ்ரீதேவியும் கமலும் செய்தால்தான் அந்த காரெக்டர்கள் எடுபடுமென்று நம்பினேன். அவர்களுக்காகக் காத்திருந்தேன். பெரும்பாலும் கமர்ஷியல் படங்களில் நடித்து வந்த ஸ்ரீதேவி, சட்டென்றுகால்ஷிட் அட்ஜஸ்ட்; செய்து தந்தது சந்தோஷமாயிருந்தது. நான் எதிர்பார்த்ததற்கும் ஒரு படி மேலாகவே ஸ்ரீதேவி அந்த காரெக்டரில் நடித்ததும் எனக்குத்திருப்தியாயிருந்தது.
கமலைப் பொறுத்தமட்டில் எந்தக் கதாபாத்திரத்தையும் அனாயாசமாகச் செய்து விடுவார் என்பது எல்லோருக்குமே தெரிந்த விஷயம். எந்த அளவிற்கு வித்தியாசப்படுத்திச் செய்யப் போகிறார் என்பதைத் தெரிந்து கொள்வதில்தான் பலருக்கு ஆர்வமிருக்கும். ஸ்ரீதேவி சம்பந்தப்பட்ட கட்டங்களில், சம்பந்தப்படாத கட்டங்களில் தன்னுடைய பேச்சுத் தொனியும் பாவமும் எப்படி இருக்கவேண்டும் என்பதைத் திட்ட மிட்டுச் செய்வதில் கவனிப்பாக இருக்க வேண்டும். அதைக் கமல் நன்றாகவே புரிந்துகொண்டு செய்து விட்டார்.”
“இந்தப் படத்தைப் பொறுத்த மட்டில் கமலுக்கு நடிப்பிற்கான பரிசைக் கொடுத்தது தவறு; ஸ்ரீதேவிக்குக் கொடுத்திருக்க வேண்டும் என்று பலர் அபிப்பிராயப்படுகிறார்களே?”
“ஸ்ரீதேவிக்கும் கொடுத்திருக்க வேண்டும் என்று சொல்லலாமே தவிர கமலுக்குத் தந்தது சரியில்லே என்று சொல்வது அபத்தம். ஒரு நடிகருக்குப் பரிசு கொடுக்கப்படுகிறதென்றால் அந்தப் படத்தில் அவர் செய்த காரெக்டரை எந்த அளவுக்குப் புரிந்து கொண்டு தனது கற்பனையைப் பயன்படுத்தி எந்த அளவுக்கு அந்தக் கதாபாத்திரத்திற்கு மெருகு கொடுத்திருக்கிறார் என்பதைப் பார்த்துத்தான் தருகிறார்கள். அந்த ரீதியில் கமலுக்குத் தந்திருப்பது நியாயமானதே.
“ஷபனா ஆஸ்மி ஸ்ரீதேவியைவிட தான் ஏற்ற பாத்திரத்தைக் கொஞ்சம் அதிகமாக முலாம் பூசியிருக்கக்கூடும் என்று எடுத்துக் கொள்ள வேண்டியது தான், ஷபனா நடித்த அந்தப் படத்தைப் பார்க்காததால் சரியாகக் கணித்துச் சொல்ல முடியாத நிலையிலிருக்கிறேன்.”
“போட்டோகிராஃபி லெலலில் எந்தக் காட்சிக்கு அதிக சிரமம் எடுத்துக் கொண்டீர்கள்?’“
பொதுவாகவே இவற்றையெல்லாம் முன்கூட்டியே மனத்திற்குள் ஒரளவு திட்டமிட்டுத்தான் படமாக்குவது வழக்கம், கமல் சிலுக்கு சம்பந்தப்பட்ட ‘பொன்மேனி… உருகுதே’ பாடலுக்கு உடையமைப்பு, டான்ஸ் மூவ்மென்ட், லைட்டிங் இவற்றில் ஸ்ட்ரெய்ன் எடுத்துக் கொண்டது உண்மை. படம் பார்த்தவர்கள் ஊட்டியை இதுவரை இந்த மாதிரி அழகாகப் படம் பிடித்ததில்லை என்று பாராட்டினார்கள். என்னுடைய ஐடியாப்படி என்னுடைய கோணத்தில் ஷாட்களைப் பிரித்து ஷூட் செய்தேன். மொத்தமாகச் சொல்லப் போனால் மத்த படங்களைப் போலவே வழக்கமான மற்றவர்களிலிருந்து வித்தியாசமாப்பட்டுப் படமாக்கினேன். தட்ஸ் ஆல்.”
எனது காமெரா“என் படங்களை ரேடியோவில் ஒலிபரப்ப முடியாது!” மன முதிர்ச்சி கொண்ட ஆழமான ஒரு ஆணுக்கும் குழந்தைத்ன நிறைந்த அழகான ஒரு பெண்ணுக்குமிடையே ஏற்பட்டுப்போன பிணைப்பில் இறுக்கத்தை பிரிவின் சோகத்தைச் சொல்லும் கதைதான் என் ’மூன்றாம் பிறை’. ஒரு படத்தின் ஒளிப்பதிவைப் பொறுத்தவரை அந்தக் கதைக்குப் பொருத்தமான ஒரு பணியை மனத்தில் நிர்ணயித்தபின். இந்தத் துணையைப் பற்றி நான் அதிகம் கவலைப்படுவதில்லை. காரணம் ஒளிப்பதிவு எனக்குச் சிறுபிள்ளை விளையாட்டு.
It has become my second nature! நான் வைக்கும் காமெரா கோணங்களின் நுணுக்கத்தை, ஒளியமைப்பின் கச்சிதத்தை, காமெரா அசைவுகளின் அமைதியைச் சில பொழுதில் என்னையறியாமலே ஏற்படும் தவறுகளைப் பெரும்பாலான சமயங்களில் ‘ரஷ்’ போட்டுப் பார்க்கும் பொழுது உணர்கிறேன். கதையோடும் காட்சியோடும் ஒன்றிப்போய், ‘இன்ஸ்டிங்டிவ்’வாக, இயல்பாகச் செயல்பட இப்பொழுது முடிகிறது. ஸ்கிரீன் பிளே, நடிப்பு, எடிட்டிங், இசையமைப்பு ஆகிய இந்த நான்கு துறைகளிலுமே நான் உணர்வு பூர்வமாக ஆழ்ந்து செயல்படுகிறேன். எனது படங்களில் பெரிய நடிகர்களானாலும் சரி, புதிதாக அறிமுகமாகும் ‘நர்வஸ்’ புது முகங்களானாலும் சரி, என் கதைக்கும் காட்சிக்கும் பொருத்தமான – இயல்பான – நடிப்பு வரும்வரை நான் சளைப்பதில்லை.
ஆக்ஷனைவிட ரியாக்ஷனுக்கே நான் அதிகம் முக்கியத்துவம் கொடுக்கிறேன். எனக்கு வேண்டியது நடிப்பல்ல – பிஹேவியர். எனது படங்களை ஞாயிறு தோறும் ரேடியோவில் திரைச் சித்திரமாக ஒலிபரப்ப முடியாது. வசனத்தின் மூலம் கதை சொல்லாது காமெரா மூலம் நான் கதை சொல்வதே காரணம். சினிமா என்பது அடிப்படையில் ஒரு Visual மீடியம். அந்த விஷுவலைப் பலப்படுத்த நான் வசனத்தை உபயோகிக்கிறேன்.
பக்கம் பக்கமாக ஒரு ரேடியோ பிளேயை எழுதிவிட்டு, அதைப் போய் ஸ்கிரீன் பிளே என்று நான் அழைப்பதில்லை. பெருவாரியான நமது படங்கள் ஒளிப்பதிவு செய்யப்பட்ட ரேடியோ நாடகங்களே. காமெரா என்பது வெறும் ரெக்கார்டிங் கருவி மாத்திரமல்ல. தன் லென்ஸ் முன் இருப்பதை ஃபிலிமில் பதிவு செய்வது காமெராவின் மிக எலிமென்டரி வேலை.
இதிலிருந்து உயர்ந்த ஒரு கிரியேட்டிவ் கருவியாகப் பயன்படுவதே சினிமாவில் இதன் பங்கு. எனது காமெராவை நான் இந்த முறையிலேயே பயன்படுத்துகின்றேன். ஒரு கதையை காமெரா பதிவு செய்கிறதென்ற நிலையில் நின்று மாறுபட்டு, அந்தக் கதையை காமெராவே சொல்கிறதென்ற கொள்கையே எனக்கு உடன் பாடானது.
– பாலுமகேந்திரா
சந்திப்பு: பாரீவள்ளல்
(18.05.1983 தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழிலிருந்து…)