தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா உட்பட 15 மாநிலங்களில் மாநிலங்களவை எம்பி பதவி காலம் ஜூன் 29-ஆம் தேதி முடிவடைகிறது. இதனால் காலியாகும் 57 இடங்களுக்கு இன்று தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது.
தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட டிகேஎஸ் இளங்கோவன், ஆர் எஸ் பாரதி, ராஜேஷ்குமார், நவநீத கிருஷ்ணன், விஜயகுமார், எஸ். ஆர் சுப்பிரமணியன் ஆகிய 6 பேரின் பதவி காலம் ஜூன் 29-ஆம் தேதி முடிவடைய உள்ளது.
தமிழகத்தில் திமுக சார்பில் 3 பேரும், காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது. திமுக சார்பில் தஞ்சை கல்யாணசுந்தரம், ரமேஷ்குமார், கிரிராஜன் ஆகியோர் போட்டியிட்டனர். காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் பா சிதம்பரம் போட்டியிட்டார். அதிமுக சார்பில் இரண்டு இடங்கள் உள்ளது. அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், முதுகுளத்தூர் ஒன்றிய செயலாளர் தர்மர் போட்டியிட்டனர்.
இதையடுத்து, திமுகவில் இருந்து கிரிராஜன், கல்யாணசுந்தரம், ராஜேஸ்குமார், அதிமுகவில் இருந்து சி.வி.சண்முகம், தர்மர், காங்கிரஸ் சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கர்நாடகா, ஹரியானா, ராஜஸ்தான், மகாரஷ்டிரா ஆகிய மாநிலங்களில் காலியாக உள்ள 16 மாநிலங்களவை உறுப்பினர்கள் இடத்திற்கு இன்று தேர்தல் நடைபெற உள்ளது.
தமிழகம் உட்பட 11 மாநிலங்களில் 41 உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வாகியுள்ள நிலையில், மீதமுள்ள இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இன்று காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை வாக்குப்பதிவு நடைபெறும். இன்று மாலை 5 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.