சென்னை கொடுங்கையூர், ராஜரத்தினம் நகர் 4-வது பிரதான சாலையைச் சேர்ந்தவர் பத்மாவதி. இவர் கோயம்பேடு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது, “நான் மேற்கண்ட முகவரியில் என்னுடைய இளைய மகளுடன் வசித்து வருகிறேன். நான் கட்டட வேலை செய்து குடும்பத்தை நடத்திவருகிறேன். என் கணவர் குமார், 2009-ம் ஆண்டு இறந்து விட்டார். என் மூத்த மகள் லிங்கேஷ்வரியும் (20), எங்கள் பகுதியில் வசித்துவந்த சீனிவாசனின் மகன் கண்ணன் என்பவரும் நீண்ட நாள்களாக காதலித்து வந்தனர்.
அந்தக் காதலை முதலில் நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் லிங்கேஷ்வரி பிடிவாதமாக இருந்ததால் 14.6.2021-ம் தேதி கொடுங்கையூரில் உள்ள சிவசக்தி கோயிலில் வைத்து திருமணம் செய்துவைத்தோம். திருமணத்தின்போது லிங்கேஷ்வரிக்கு மூன்று சவரன் நகைகள் போட்டோம். அவரின் கணவர் கண்ணன், தனியார் நிறுவனத்தில் டெலிவரி மேனாக வேலைப்பார்த்து வந்தார். லிங்கேஷ்வரி சென்னையில் உள்ள கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தாள். திருமணத்துக்குப் பிறகு இருவரும் சந்தோஷமாக வாழ்ந்து வந்தனர்.
ஆரம்பத்தில் ஆயிரம் விளக்குப் பகுதியில் வாடகைக்கு வீட்டில் குடியிருந்த அவர்கள், கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு கண்ணன் வேலை செய்வதற்கு வசதியாக ஆழ்வார்திருநகர், தனலட்சுமி நகரில் குடியிருந்து வந்தனர். 2 மாதங்களாக கண்ணனின் பெரியம்மா மகன் சுரேஷ் என்பவரும் அந்த வீட்டில் குடியிருந்து வந்தார். லிங்கேஷ்வரியும் கண்ணனும் அடிக்கடி எங்கள் வீட்டுக்கு வந்து செல்வார்கள், போனிலும் பேசுவார்கள். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பாக லிங்கேஷ்வரிக்கு தானாகவே கருச்சிதைவு ஏற்பட்டது. அதனால் லிங்கேஷ்வரி மனவேதனையில் இருந்துவந்தார்.
இந்த நிலையில், கடந்த 8.6.2022-ம் தேதி இரவு வீட்டில் தனியாக இருந்த லிங்கேஷ்வரி, தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். அதை பார்த்த சுரேஷ், லிங்கேஷ்வரியின் சடலத்தை கீழே இறக்கி மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாகவும், அங்கு லிங்கேஷ்வரியைப் பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக கூறியதாகவும் கண்ணன் எனக்கு தகவல் சொன்னான். அதனால் நானும் என் உறவினர்களும் மருத்துவமனைக்குச் சென்று லிங்கேஷ்வரின் சடலத்தைப் பார்த்தோம். எனவே விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார். புகாரின் பேரில் கோயம்பேடு போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
திருமணமாகி சில ஆண்டுகளே ஆவதால் ஆர்.டி.ஓ விசாரணக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஆர்.டி.ஓ அறிக்கை அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் தெரிவித்தனர்.