லக்னோ: கான்பூரில் நடந்த வன்முறையை தொடர்ந்து இன்று சில அமைப்புகள் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதால், மாநிலம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். பாஜகவின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா, தொலைக்காட்சி விவாதத்தில் முகமது நபி குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்திருந்தார். நுபுர் சர்மாவின் கருத்துக்கு அரபு நாடுகள் கூட கண்டனம் தெரிவித்தன. நுபுர் சர்மாவை பாஜக கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்துள்ளது. டெல்லி போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். முன்னதாக கடந்த வெள்ளிக்கிழமை கான்பூரில் நடந்த வன்முறையைத் தொடர்ந்து, உத்தர பிரதேச காவல்துறை உஷார்படுத்தப்பட்டுள்ளனர். இன்று நடைபெறும் தொழுகைக்கு பின்னர், சில முஸ்லிம் அமைப்புகள் முழு அடைப்பு போராட்டம் நடத்த அழைப்பு விடுத்துள்ளன. அதனால், அனைத்து மாவட்டங்களின் கலெக்டர் மற்றும் எஸ்பிகளுக்கு பல அறிவுறுத்தல்களை மாநில அரசு வழங்கியுள்ளது. வாரணாசியில் நடைபெறும் தொழுகைக்கு முன்னதாக, மசூதி கமிட்டியின் இணைச் செயலாளர் சையது முகமது யாசின் வெளியிட்ட அறிக்கையில், ‘இளைஞர்களை தூண்டிவிட்டு சிலர் பொறுப்பற்ற வேலையைச் செய்து வருகின்றனர். அவர்கள் நம்முடைய வாழ்வில் விளையாடுகிறார்கள். இளைஞர்கள் சட்டத்தின் பிடியில் சிக்கி, தங்களுக்கும் தங்கள் பெற்றோருக்கும் பிரச்னையாக மாறுகிறார்கள். எனவே சமூக ஊடகங்களில் இருந்து இளைஞர்கள் விலகி இருக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.